search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பிரான்ஸ் உடன் இந்தியா துணைநிற்கும் - பிரதமர் மோடி டுவிட்

    பிரான்ஸ் நாட்டில் தேவாலயத்திற்குள் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோவில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேளிச்சித்திரத்தை மையமாக வைத்து அந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த 16-ம் தேதி சாமுவேல் பெடி என்ற வரலாற்று ஆசிரியர் பயங்கரவாதியால் தலைதுண்டித்து கொல்லப்பட்டார்.

    இதையடுத்து, பிரான்ஸ் நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று மதியம் அந்நாட்டின் நைஸ் நகரில் உள்ள நோட்ரி டேமி என்ற கிருஸ்தவ தேவாலயத்திற்குள் கத்தியுடன் நுழைந்த பயங்கரவாதி அங்கிருந்தவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தினான்.

    பயங்கரவாதியின் இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். குறிப்பாக ஒரு பெண் தலைதுண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், பிரான்சில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நைஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் நடந்த தாக்குதல் உள்பட சமீபத்தில் பிரான்சில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு நான் கடும் கண்டனம் தெரிவித்திறேன். 

    இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், பிரான்ஸ் மக்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பிரான்ஸ் உடன் இந்தியா துணைநிற்கும்’ என தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, பிரான்ஸ் அரசுக்கு தேவையான உதவிகளை செய்வதாக ரஷிய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×