search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பீகாரில் 54 சதவீதம் வாக்குப்பதிவு - முதல்கட்ட தேர்தல் அமைதியாக முடிந்தது

    கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பீகாரில் மக்கள் ஆர்வத்துடன் ஓட்டுபோட்டனர். அமைதியாக முடிந்த முதல் கட்ட தேர்தலில் 54 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
    பாட்னா:

    நாடு கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு எதிராக தீவிரமாக போராடிக்கொண்டிருக்கும் வேளையில் பீகார் மாநில சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிற அந்த மாநிலத்தில், 243 இடங்களைக்கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    முதல் கட்ட தேர்தல் அக்டோபர் 28-ந் தேதியும் (71 தொகுதிகள்), 2-ம் கட்ட தேர்தல் நவம்பர் மாதம் 3-ந் தேதியும் (94 தொகுதிகள்), 3-வது இறுதிக்கட்ட தேர்தல் நவம்பர் 7-ந் தேதியும் (78 தொகுதிகள்) நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணிக்கும், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைமையிலான மெகா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 134 தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்கி இருக்கிறது.

    முதல் கட்ட தேர்தலை 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகள் சந்தித்தன. இவற்றில் 2.15 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். பெண் வாக்காளர்களை விட (1.01 கோடி) ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை (1.12 கோடி) அதிகம் ஆகும். மூன்றாம் பாலினத்தவர் 599 பேர் வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள்.

    இந்த முதல் கட்ட தேர்தலில், நிதிஷ்குமார் மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள 8 மந்திரிகள் உள்பட 1,066 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.

    ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடியும், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைமையிலான மெகா கூட்டணிக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவும், லோக்ஜனசக்தி கட்சிக்கு அதன் தலைவர் சிராக் பஸ்வானும் தீவிர பிரசாரம் செய்தனர்.

    கொரோனா பரவலுக்கு மத்தியில் நடக்கிற முதல் தேர்தல் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்தலில் 31 ஆயிரத்து 371 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    முக கவசங்கள், சுய பாதுகாப்பு கருவிகள், முக ஷீல்டுகள், கையுறைகள் என கொரோனா பாதுகாப்பு அம்சங்களுடன் நடந்த முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

    33 தொகுதிகள் பதற்றம் நிறைந்தவை என கண்டறியப்பட்டதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    வாக்குப்பதிவு மந்தமாகவே தொடங்கியது. முதல் 2 மணி நேரத்தில் 6.74 சதவீத வாக்குகளே பதிவாகின. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வாக்குப்பதிவு விறுவிறுப்பு அடைந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

    மத்திய மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான கிரிராஜ்சிங் லக்கிசாரையிலும், முன்னாள் முதல்-மந்திரியும், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி தலைவருமான ஜித்தன்ராம் மஞ்சி கயாவிலும் வாக்கு அளித்தனர். மாற்றுத்திறனாளி ஒருவர் மூன்று சக்கர சைக்கிளில் வந்து நவாடா வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்தார். தினனா தொகுதியில் பெண்கள் குழுவாக வந்து வாக்களித்து விட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வாக்குப்பதிவில் அவ்வப்போது இடையூறுகள் ஏற்பட்டன. ஆனாலும் பெரிய அளவிலான வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இருந்தபோதிலும், அவுரங்காபாத் திப்ரா பகுதியில் 2 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. அவற்றை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் செயலிழக்க செய்தனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

    இறுதியாக 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. அப்போது 53.46 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

    கடந்த 2015-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் 54.94 சதவீத வாக்குகளும், சென்ற ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 53.54 சதவீத ஓட்டுகளும் பதிவாகி இருந்தன.

    இப்போது கெரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நடந்த முதல் கட்ட தேர்தலில் இந்த அளவுக்கு வாக்குப்பதிவு நடந்திருப்பது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

    பீகாரில் இரண்டாவது கட்ட தேர்தல் வரும் 3-ந் தேதி 94 தொகுதிகளுக்கு நடக்கிறது. அதற்கான பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.
    Next Story
    ×