search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு
    X
    சுப்ரீம் கோர்ட்டு

    குவைத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    குவைத்தில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா பரவல் காரணமாக குவைத்தில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை மீட்டு கொண்டு வரவும், உணவு, மருத்துவம், சுகாதாரமான தங்கும் வசதி செய்து கொடுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மனுவை கடந்த ஜூலை 23-ந் தேதி விசாரித்த நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய கூடுதல் பிரமாண பத்திரத்தை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

    இந்த வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.நாகமுத்து, ‘குவைத்தில் சிக்கிய 1.33 லட்சம் இந்தியர்களில், 87,022 பேர் கடந்த 1-ந் தேதி வரை மீட்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மீட்கப்படாமல் உள்ளவர்களின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. தொடர்ந்து குறைகளை தெரிவித்து வருகின்றனர்’ என்று வாதிட்டார்.

    இதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், ‘குவைத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்டு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தூதரக ரீதியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குவைத் நாட்டுக்குள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன’ என வாதிட்டார்.

    அப்போது நீதிபதிகள், ‘குவைத் நாட்டுக்குள் செல்ல கட்டுப்பாடுகள் இருக்கலாம். ஆனால், அங்கிருந்து வெளியேறி சொந்த நாட்டுக்கு திரும்ப விரும்பும் இந்தியர்களை மீட்பதில் என்ன சிக்கல் உள்ளது?’ என்று கேள்வி எழுப்பியதோடு, குவைத்தில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை மீட்க உரிய நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
    Next Story
    ×