search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    போலி கம்பெனிகள் தொடங்கி ரூ.500 கோடி மோசடி - வருமான வரித்துறை கண்டுபிடித்தது

    போலி கம்பெனிகள் தொடங்கி, ரூ.500 கோடி மோசடி செய்த கும்பலை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
    புதுடெல்லி:

    போலி ரசீதுகளை உருவாக்கி பணம் திரட்டி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில், டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியம், அரியானா, பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் 42 இடங் களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    ஒட்டுமொத்த கும்பல், இடைத்தரகர்கள், பணத்தை கையாண்டவர்கள், பலன் பெற்றவர்கள் மற்றும் மோசடி நிறுவனங்கள் குறித்த ஆதாரங்கள் சிக்கின.

    அதாவது, மோசடி கும்பல், பல மாநிலங்களில் போலி கம்பெனிகளை தொடங்கி, அவற்றில் தங்கள் ஊழியர்கள், கூட்டாளிகள் ஆகியோரை இயக்குனர்களாகவும், பங்குதாரர்களாகவும் போலியாக நியமித்துள்ளனர்.

    வங்கி அதிகாரிகள் துணையுடன், அந்த போலி நிறுவனங்களின் பெயரில் வங்கிக்கணக்குகள் தொடங்கி இயக்கி வந்துள்ளனர். கணக்கில் காட்டப்படாத பணத்தை அந்த நிறுவனங்களின் பெயரில் பதுக்கி வைத்துள்ளனர்.

    போலி ரசீதுகளை உருவாக்கி, பணம் பெற்றுள்ளனர். உத்தரவாதம் இல்லாத கடன்களை பெற்றுள்ளனர்.

    தங்கள் குடும்ப உறுப்பினர்கள், நம்பிக்கையான ஊழியர்கள் பெயரில் வங்கி லாக்கர்களை பெற்று பயன்படுத்தி வந்துள்ளனர்.

    இந்த மோசடியில் பலன் பெற்றவர்கள், முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட்களிலும், வைப்புநிதிகளிலும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

    மோசடி கும்பலிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள், இந்த மோசடியை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.

    வருமான வரித்துறையின் அதிரடி சோதனையில், ரூ.2 கோடியே 37 லட்சம் ரொக்கமும், ரூ.2 கோடியே 89 லட்சம் மதிப்புள்ள நகைகளும் கைப்பற்றப்பட்டன. இயக்கப்படாத 17 வங்கி லாக்கர்களும் கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×