search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜே.பி. நட்டா
    X
    ஜே.பி. நட்டா

    காங்கிரசின் இந்த செயல்களால் மோடிக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கும் -ஜே.பி.நட்டா

    நேரு-காந்தி வம்சாவளியினர் ஒருபோதும் பிரதமரை மதிப்பது இல்லை என பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தின்போது பிரதமர் மோடியின் பெரிய அளவிலான உருவ பொம்மையை ராட்சதன் போல சித்தரித்து தீவைத்து காங்கிரசார் எரித்தனர். இந்தச் சம்பவத்துக்கு பா.ஜ.கவினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். 

    இதுதொடர்பாக பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடியின் பெரிய அளவிலான உருவப் பொம்மையை எரிக்கும் ராகுல் காந்தியின் இயக்கத்தில் நடைபெற்ற நாடகம் அவமானகரமானது. ஆனால், இது எதிர்பார்க்காத ஒன்று அல்ல. நேரு-காந்தி வம்சாவளியினர் ஒருபோதும் பிரதமரை மதிப்பது இல்லை. 2004-2014-ம் ஆண்டு வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது வலிமையற்ற பிரதமரை நடத்திய விதத்தைப் பார்த்தோம். ஒரு கட்சி தொடர்ச்சியாக அருவருக்கத்தக்க நிகழ்வுகைள நடத்துகிறது என்றால் அது காங்கிரஸ்தான்.

    பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் எப்போதும் ராஜஸ்தானில் அதிகமாக இருக்கும். பஞ்சாப்பைப் போல ராஜஸ்தானிலும் பெண்கள் பாதுகாப்பாக இல்லை. காங்கிரசின் பஞ்சாப் அமைச்சர்கள் உதவித் தொகை வழங்குவதில் ஊழல் செய்துகொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் மீது காங்கிரஸ் ஒருபோதும் பேச்சு சுதந்திரத்தை மதிக்கத்தக்க வகையில் செய்தது இல்லை.

    பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகளுக்காக காங்கிரஸ் அவமதிப்பு செய்துள்ளது. அதனை நாம் அவசரகாலத்தின் போது பார்த்துள்ளோம். அதற்கு பிறகு, ஊடகத்தின் சுதந்திரத்தை குறைப்பதற்கு ராஜீங் காந்தி அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. யாரேனும் அரசின் யதேச்சதிகாரத்தை, எதிர்தரப்பினருக்கு நெருக்கடி கொடுப்பதை, காங்கிரசின் வழக்கமான பாணியில் பேச்சு சுதந்திரத்தை நசுக்குவதைப் பார்க்கவேண்டுமென்றால் காங்கிரஸ் ஆசி பெற்ற மகாராஷ்டிரா அரசைப் பாருங்கள்.

    அவர்கள் ஆட்சி செய்யவில்லை, அதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்கின்றனர். 

    ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிரதமரான ஒருவர் மீது ஒரு வம்சம் தனிப்பட்ட வெறுப்பைக் கொண்டுள்ளது. காங்கிரஸ் தொடர்ந்து சொல்லும் பொய்களும் வெறுப்பு பேச்சுகளும் பிரதமர் மோடிக்கான மக்கள் ஆதரவை மேலும் அதிகரிக்கும்.

    இவ்வாறு நட்டா கூறி உள்ளார்.
    Next Story
    ×