search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா
    X
    கேரள சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா

    கொரோனாவால் இறந்தவர் முகத்தை உறவினர்கள் பார்க்க அனுமதி- சுகாதாரத்துறை மந்திரி தகவல்

    கொரோனாவால் மரண மடைந்தவர்களின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க உறவினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சுகாதாரத் துறை பொதுமக்களிடம் பரிசோதனை செய்வதை அதிகப்படுத்தி உள்ளது. நேற்று ஒரேநாளில் 48,212 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மொத்த பரிசோதனை எண்ணிக்கை 43 லட்சத்து 28 ஆயிரத்து 416 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் சுமார் 4 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டிருந்தனர். அதில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 910 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    தொடர்ந்து 2 லட்சத்து 82 ஆயிரத்து 568 பேர் சுகாதாரத்துறை கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 661 பேர் வீட்டு கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கேரளாவில் நேற்று ஒரே நாளில் 48 ஆயிரத்து 212 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 6,845 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 96,585 பேர் கொரோனா தொற்றுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 36 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர். இதைத் தொடர்ந்து கேரளாவில் பலி எண்ணிக்கை 1,332 ஆக உயர்ந்துவிட்டது.

    கொரோனா காரணமாக மரணமடைந்தவர்களை அடக்கம் மற்றும் தகனம் செய்ய பின்பற்ற வேண்டிய புதிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா கூறியதாவது:-

    கொரோனா நோய் பரவலை தடுக்க அனைவரும் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவேண்டும். கொரோனாவால் மரண மடைந்தவர்களின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க உறவினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    அடக்கம் மற்றும் தகனம் செய்யும்போது ஊழியர்கள் இறந்தவர்களின் முகத்தை மட்டும் நெருங்கிய உறவினர்களிடம் திறந்து காட்டுவார்கள். ஆனால் உடல்களை மிக அருகில் நின்று பார்க்கக்கூடாது. குறிபிட்ட இடைவெளி விட்டு மதம் சார்ந்த சடங்குகளை நிறைவேற்ற வேண்டும்.

    எந்த காரணம் கொண்டும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை குளிப்பாட்டவோ, கட்டிப்பிடிக்கவோ, முத்தமிடவோ கூடாது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதிற்கு உட்பட்டவர்கள், நோயாளிகள் கொரோனா பாதித்தவர்கள் அருகில் செல்லவே கூடாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×