search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா தடுப்பூசியை முன்னதாக தயாரிக்க தயாராகும் ஐதராபாத் நிறுவனம்

    மத்திய அரசு அவசர அவசரமாக தேவை என்று தெரிவித்தால் கொரோனா தடுப்பூசி மருந்தை முன்னதாக தயாரிக்க தயார் என்று ஐதராபாத் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஐதராபாத்:

    கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து உருவாக்கும் பணியில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

    இந்த நிறுவனம் தயாரித்து உள்ள மருந்துக்கு கோவேக்சின் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த மருந்து 2- கட்ட பரிசோதனையை முடித்து உள்ளது.

    அடுத்து 3-வது கட்ட பரிசோதனையை மேற்கொள்ள இந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்பேரில் நவம்பர் முதல் வாரம் முதல் நாடுமுழுவதும் கோவேக்சின் மருந்தின் 3-வது கட்ட பரிசோதனை தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த 3-வது கட்ட பரிசோதனை ஏப்ரல் அல்லது மே மாதம் வரை நடைபெறும். அதன்பிறகு பரிசோதனை அறிக்கைகளை மத்திய அரசுக்கு ஐதராபாத் நிறுவனம் தாக்கல் செய்யும்.

    அந்த மருத்துவ பரிசோதனைகளை மத்திய அரசு ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கினால் ஜூன் மாதம் கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணிகளை தொடங்க முடியும் என்று ஐதராபாத் நிறுவனம் அறிவித்து உள்ளது.

    என்றாலும் அதற்கு முன்னதாக கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்து வழங்க இந்த நிறுவனம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் செயல் இயக்குனர் சாய் பிரசாத் கூறியதாவது:-

    எங்களது நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்துதான் இந்தியாவின் முதல் தடுப்பு மருந்தாக இருக்கும். ஏப்ரல் மாதத்துக்குள் எங்களது பரிசோதனைகள் முடிந்து விடும். அதன்பிறகு உரிய அனுமதி கிடைத்ததும் அதிக அளவு தடுப்பூசி மருந்து தயாரிக்கப்படும்.

    என்றாலும் மத்திய அரசு அவசர அவசரமாக தேவை என்று தெரிவித்தால் கொரோனா தடுப்பூசி மருந்தை முன்னதாக தயாரித்து கொடுக்கவும் எங்களால் முடியும். 3-வது கட்ட பரிசோதனை நடந்து கொண்டிருக்கும் நிலையிலேயே எங்களால் தடுப்பூசி மருந்தை சப்ளை செய்ய முடியும்.

    இதுதொடர்பான தகவல் அனைத்தையும் நாங்கள் மத்திய அரசுக்கு தெரிவித்து இருக்கிறோம்.

    தற்போது ஐதராபாத்தில் உள்ள எங்களது தொழிற் சாலையில் ஆண்டுக்கு 150 மில்லியன் டோஸ் மருந்துகளை தயாரிக்க முடியும். மேலும் ஒரு தொழிற்சாலையை ஐதராபாத்தில் 150 கோடி ரூபாய் செலவில் கட்ட இருக்கிறோம்.

    இதன்மூலம் ஆண்டுக்கு 500 மில்லியன் டோஸ் அளவுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை எங்களால் உற்பத்தி செய்து தரமுடியும்

    உலகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட நாடுகள் எங்களிடம் கொரோனா தடுப்பூசி மருந்து கேட்டு பேசி வருகின்றன. அந்த நாடுகளுக்கும் தேவைக்கு ஏற்ப கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×