search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    30 கோடி பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி

    நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடி பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளையெல்லாம் கதிகலங்க வைத்து வருகிற கொரோனா வைரசை தடுத்து நிறுத்துவதற்காக தடுப்பூசிகளை உருவாக்கி, அவற்றை மக்களுக்கு போட்டு பரிசோதிக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

    அந்த வகையில் நமது நாட்டிலும் இந்த மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசே நேரடியாக வாங்கி, அவற்றை முன்னுரிமை குழுக்களுக்கு இலவசமாக போடச்செய்யும் என தெரிய வந்துள்ளது.

    இதுபற்றி டெல்லியில் மத்திய அரசு வட்டாரங்கள் வெளியிட்ட முக்கிய தகவல்கள் வருமாறு:-

    * கொரோனா தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசே செயல்படுத்தும்.

    * கொரோனா தடுப்பூசி தயாரானவுடன், மத்திய அரசுதான் நேரடியாக கொள்முதல் செய்யும். கொள்முதல் செய்தற்கான தனிப்பாதைகளை மாநிலங்கள் வகுக்கக்கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

    * முதல் கட்டமாக முன்னுரிமை அடிப்படையில் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். இதற்கான பயனாளிகளை (முன்னுரிமை குழுக்களை) அடையாளம் காணும் செயல்முறையை மாநிலங்கள், யூனியன் பிரதேச நிர்வாகங்களின் உதவியுடன் மத்திய அரசு தொடங்கி உள்ளது.

    * ஆரம்ப கட்டத்தில் 4 பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அவர்கள், டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் 1 கோடி பேர்; மாநகராட்சி ஊழியர்கள், போலீசார், ஆயுத படையினர் என 2 கோடி பேர்; 50 வயதுக்கு மேற்பட்டோர் 26 கோடி பேர்; நாள்பட்ட வியாதிகளை கொண்டுள்ள 50 வயதுக்கு உட்பட்ட சிறப்புக்குழுவினர் மற்றும் சிறப்பு கவனிப்பு தேவைப்படுவோர் சுமார் 1 கோடி பேர் ஆவார்கள்.

    * இந்த முன்னுரிமை குழுவினரை அடையாளம் கண்டு அடுத்த மாதம் மத்திக்குள் பட்டியலிடுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்படுவார்கள்.

    * தடுப்பூசி போடுகிற பணியாளர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ரஷிய நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் 2 மற்றும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை இந்தியாவில் நடத்துவதற்கும், வினியோகிப்பதற்கும் ரஷிய நேரடி முதலீட்டு நிதியமும், ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிசும் ஒப்பந்தம் போட்டுள்ளன.

    அதைத் தொடர்ந்து இந்த தடுப்பூசியின் 2 மற்றும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு ஒப்புதல் வழங்குமாறு கேட்டு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் விண்ணப்பித்தது. இந்த ஒப்புதல் கடந்த சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டது.

    டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிசுக்கு ரஷிய நேரடி முதலீட்டு நிதியம், 10 கோடி தடுப்பூசி ‘டோஸ்’களை வினியோகம் செய்யும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    தற்போது இந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்கப்படும் என்று மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

    சோதனையின் தேதி, நேரம் ஆகியவற்றை டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இரண்டாவது கட்ட பரிசோதனை ஆகும். இந்த சோதனை முடிந்த பின்னர் 3-வது கட்ட பரிசோதனை நடைபெறும்.

    இதற்கிடையே ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை சந்தையிட்டு வினியோகிப்பதற்கு டெல்லியை சேர்ந்த ‘மேன்கைண்ட் பார்மா’ என்ற மற்றொரு இந்திய நிறுவனமும், ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கடந்த திங்கட்கிழமை கையெழுத்தானது.
    Next Story
    ×