search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி
    X
    தடுப்பூசி

    இலவச தடுப்பூசி வாக்குறுதி சட்டப்படி தவறு அல்ல- முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் கருத்து

    இலவசமாக தடுப்பூசி வழங்குவதாக வாக்குறுதி அளிப்பது சட்டப்படி தவறு அல்ல என்று 3 முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்கள் தெரிவித்தனர்.
    புதுடெல்லி:

    பீகார் மாநில சட்டசபை தேர்தலையொட்டி, பா.ஜனதா சார்பில் நேற்று முன்தினம் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் கிடைத்ததுடன், பீகார் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.

    இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில், இப்படி வாக்குறுதி அளிப்பது சட்டப்படி தவறல்ல என்று 3 முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்கள் கூறியுள்ளனர்.

    2010-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை தலைமை தேர்தல் கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்.ஒய்.குரோஷி கூறியதாவது:-

    இலவசமாக கொரோனா தடுப்பூசி அளிப்பதாக வாக்குறுதி அளிப்பது சட்டப்படி தவறல்ல. சட்டரீதியாக, எதை வேண்டுமானாலும் வாக்குறுதியாக அளிக்கலாம். ஆனால், அது அர்த்தமற்றதாக இருக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

    மேலும், இத்தகைய வாக்குறுதிகள், நெறிமுறைகளை மீறியதாக கேள்வி உருவாகும். தேர்தல் மாதிரி நடத்தை முறைகளே நெறிமுறைகள் சம்பந்தப்பட்டதுதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த ஓ.பி.ரவத், “ஒரு கட்சி, தனது தேர்தல் அறிக்கையில் என்ன வாக்குறுதி வேண்டுமானாலும் அளிக்கலாம். ஆனால், அதை நிறைவேற்ற தேவையான நிதிக்கு என்ன வழி என்பதை விளக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஒரு தீர்ப்பில் கூறியிருக்கிறது” என்று கூறினார்.

    பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கூறியதாவது:-

    தேர்தல் அறிக்கையில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், தேர்தல் அறிக்கை வெளியிடும் நேரம் முக்கியத்துவம் வாய்ந்தது. தேர்தல் அறிக்கையை தேர்தல் நெருங்கும்போது வெளியிடாமல், முன்கூட்டியே வெளியிட வேண்டும் என்று தேர்தல் சீர்திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை இன்னும் தேர்தல் கமிஷனால் அமல்படுத்த முடியவில்லை.

    வாக்குறுதியை அமல்படுத்துவதை கண்காணிக்க ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×