search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லோக்பால்
    X
    லோக்பால்

    நடப்பு நிதியாண்டில் லோக்பாலுக்கு வந்த 55 புகார்கள்

    நடப்பு நிதியாண்டில், லோக்பாலுக்கு 55 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் எம்.பி.க்கள் மீதான 3 புகார்களும் அடங்கும்.
    புதுடெல்லி:

    மக்கள் பிரதிநிதிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கும் உயரிய அமைப்பு லோக்பால் ஆகும். கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி, இதன் தலைவராக நீதிபதி பி.சி.கோஷ் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    லோக்பால் அமைப்பில் ஒரு தலைவரும், அதிகபட்சம் 8 உறுப்பினர்களும் இருக்கலாம். எனவே, கடந்த ஆண்டு மார்ச் 27-ந் தேதி, 8 உறுப்பினர்களுக்கு நீதிபதி பி.சி.கோஷ் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

    அவர்களில் ஒரு உறுப்பினரான நீதிபதி அஜய்குமார் திரிபாதி கடந்த மே மாதம் இறந்து விட்டார். மற்றொரு உறுப்பினரான நீதிபதி திலீப் போசலே கடந்த ஜனவரி மாதம் ராஜினாமா செய்து விட்டார். எனவே, 6 உறுப்பினர்களுடன் லோக்பால் இயங்கி வருகிறது.

    இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம்வரை லோக்பாலுக்கு வந்த புகார்கள் பற்றிய புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, லோக்பாலுக்கு மொத்தம் 55 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 22 புகார்கள், மத்திய அரசின் குரூப் ஏ, குரூப் பி பிரிவு அதிகாரிகளுக்கு எதிரானவை. 26 புகார்கள், பல்வேறு வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் மீதானவை. எம்.பி.க்கள் மீதான 3 புகார்களும் அடங்கும்.

    இவற்றில், 28 புகார்கள், பூர்வாங்க விசாரணைக்கு பிறகு முடித்து வைக்கப்பட்டன. 12 புகார்களை ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையமும், ஒரு புகாரை சி.பி.ஐ.யும் பூர்வாங்க விசாரணை நடத்த லோக்பால் உத்தரவிட்டது.

    அதே சமயத்தில், கடந்த நிதியாண்டில், லோக்பாலுக்கு 1,427 புகார்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×