search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ரசாயன கசிவு- புதுமாப்பிள்ளை பலி

    ராய்ச்சூர் அருகே, மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டது. இதில் புதுமாப்பிள்ளை இறந்தார். மேலும் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
    ராய்ச்சூர்:

    ராய்ச்சூர் புறநகர் வடலூர் கிராஸ் பகுதியில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ராய்ச்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை ஊழியர்கள், மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    இந்த சந்தர்ப்பத்தில் தொழிற்சாலையில் இருந்து திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டது. அந்த ரசாயன நெடியை சுவாசித்த ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஊழியர்கள், தொழிற்சாலையில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இந்த நிலையில் ரசாயன கசிவை சுவாசித்த 5 பேர் தொழிற்சாலைக்குள் மயங்கி விழுந்தனர்.

    இதுபற்றி ஊழியர்கள், ராய்ச்சூர் புறநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் தொழிற்சாலைக்குள் மயங்கி விழுந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ராய்ச்சூர் ரிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    ஆனால் தொழிற்சாலையில் வேலை செய்த என்ஜினீயரான லட்சுமணன் (வயது 28) என்பவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து ராய்ச்சூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லட்சுமணனுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. புதுமாப்பிள்ளை லட்சுமணனின் உடலை பார்த்து அவரது மனைவியும், உறவினர்களும் கதறி அழுதனர். இது காண்போரை கண்கலங்க வைத்தது.
    Next Story
    ×