search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவகவுடா
    X
    தேவகவுடா

    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை ஒழிக்க தேசிய கட்சிகள் முயற்சி: தேவகவுடா குற்றச்சாட்டு

    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை ஒழிக்க தேசிய கட்சிகள் முயற்சி செய்வதாக சிரா இடைத்தேர்தல் பிரசாரத்தில் தேவகவுடா குற்றம்சாட்டியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ராஜராஜேஸ்வரிநகர், சிரா ஆகிய தொகுதிகளுக்கு வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று சிரா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர் அம்மஜம்மாவை ஆதரித்து ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    2 தேசிய கட்சிகள் நமது கட்சியை தாக்கி பேசுகின்றன. அந்த கட்சிகளின் தலைவர்கள் என்ன பேசுகிறார்களோ அதற்கு தகுந்த பதில் அளிக்க நான் தயாராக உள்ளேன். நான் இங்கேயே 10 நாட்கள் தங்கியிருந்து பிரசாரம் செய்வேன். நான் வாய் தவறி பேச மாட்டேன். நடந்த விஷயங்களை உங்கள் முன் எடுத்து வைக்க எனக்கு எந்த பயமும் இல்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது துமகூரு மாவட்டத்தில் 9 தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) வெற்றி பெற்றிருந்தது.

    கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் துமகூரு மாவட்டத்தில் நமது கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதில் ஒருவர் தான் சத்யநாராயணா. அவர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். அதனால் அவரது மனைவி அம்மஜம்மாவை இங்கு வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். 2 தேசிய கட்சிகளும் ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஒழிக்க முயற்சி செய்து வருகின்றன. ஆனால் மாநில கட்சியின் தேவையை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

    இவ்வாறு தேவேகவுடா பேசினார்.

    இந்த கூட்டத்திற்கு பிறகு தேவகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “குமாரசாமி கண்ணீர் விடுவதை நம்ப வேண்டாம் என்று சித்தராமையா கூறியுள்ளார். நான் கண்ணீர் விட்டதால் தான் சித்தராமையாவுக்கு எங்கள் கட்சியில் இருந்தபோது துணை முதல்-மந்திரி பதவி கிடைத்தது“ என்றார்.
    Next Story
    ×