search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    லடாக் எல்லையில் சுற்றித்திரிந்தபோதுகைதான சீன சிப்பாய், திரும்ப ஒப்படைப்பு

    லடாக் எல்லையில் சுற்றித்திரிந்து கைதான சீன சிப்பாய், முறைப்படி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
    புதுடெல்லி:

    இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நெடுங்காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கடந்த மே மாதத்தில் இருந்து இரு தரப்பு மோதல் வலுத்து வருகிறது. சீனாவின் தொடர் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    தொடர் மோதல்களால் இரு தரப்பும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினரை குவித்து உள்ளனர். இதனால் அங்கு போர் மேகம் சூழ்ந்துள்ளது.

    இன்னொரு பக்கம் எல்லையில் அமைதியையும், சமாதானத்தையும் நிலைநிறுத்துவதற்கு இரு தரப்பு பேச்சு வார்த்தைகள், ராணுவ மட்டத்தில் நடந்து வருகிறது. 7 சுற்று பேச்சுவார்த்தை முடிந்து, அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் தயாராகி வருகின்றன.

    இந்த தருணத்தில் கடந்த 18-ந் தேதியன்று, கிழக்கு லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் டெம்சோக் செக்டாரில் சுற்றித்திரிந்த சீன சிப்பாய் கார்போரல் வாங் யா லாங் இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்தநிலையில் 18-ந் தேதி இரவு சீன படையின் மேற்கு பிராந்திய கட்டளையின் செய்தி தொடர்பாளர் ஜாங் சூய்லி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், “அக்டோபர் 18-ந் தேதி மாலை சீன, இந்திய எல்லைப்பகுதியில் தொலைந்து போன சீன சிப்பாயை இந்தியா விரைவில் ஒப்படைக்கும் என சீனா நம்புகிறது. காணாமல் போன மாட்டினத்தை சேர்ந்த கடமா என்ற விலங்கை தேடிக்கொண்டிருந்த உள்ளூர் மேய்ப்பர்களுக்கு உதவும்போது இந்த சிப்பாய் தொலைந்து போனார்” என கூறப்பட்டிருந்தது.

    அவர் தொலைந்து போனது பற்றி இந்திய ராணுவத்திடம் சீன படை முறைப்படி தெரிவித்தது. அதைத் தொடர்ந்து சீன சிப்பாயை அந்த நாட்டிடம் ஒப்படைக்க இந்தியா நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி, சீன சிப்பாய் கார்போரல் வாங் யா லாங் விடுவிக்கப்பட்டார். அவர் நேற்றுமுன்தினம் இரவு கிழக்கு லடாக்கில் சுசூல் மோல்டோ எல்லை பகுதியில் சீன படையினரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார். இதை சீன படையும் உறுதி செய்துள்ளது.

    இதுகுறித்து சீன தரப்பில் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “ஞாயிற்றுக்கிழமையன்று சீன, இந்திய எல்லைக்கு அருகே, தொலைந்துபோன கடமாவைத் தேடிக்கொண்டிருந்த உள்ளூர் மேய்ப்பர்களுக்கு உதவும்போது எங்கள் சிப்பாய் தொலைந்துபோனார். சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின்படி, அவரை சீன படையிடம் 21-ந் தேதி காலை (நேற்று) இந்திய ராணுவம் ஒப்படைத்து விட்டது” என கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×