search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கடந்த ஆண்டைவிட நெல் கொள்முதல் 22 சதவீதம் அதிகம் - மத்திய அரசு தகவல்

    கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 22.43 சதவீதம் அதிகமாக நெல் கொள்முதல் நடைபெற்று இருப்பதாக அமைச்சகம் குறிப்பிட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    2020-2021-ம் ஆண்டுக்கான காரீப் பருவத்தில் ஏற்கனவே உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டப்படி நெல் கொள்முதல் நாடு முழுவதும் முழுவீச்சில் நடந்து வருவதாக மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

    இதன்படி தமிழகம், கேரளா, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் 8 லட்சத்து 54 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து நேற்று முன்தினம் வரை 98.19 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. ஒரு டன் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.18,880 வீதம் மொத்தம் 98.19 லட்சம் டன் நெல் ரூ.18,539.86 கோடிக்கு வாங்கப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 80.20 லட்சம் டன் நெல்தான் வாங்கப்பட்டு இருக்கிறது. எனவே, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 22.43 சதவீதம் அதிகமாக நெல் கொள்முதல் நடைபெற்று இருப்பதாக அமைச்சகம் குறிப்பிட்டு உள்ளது.

    மேலும், தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று, 42.46 லட்சம் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களையும், 1.23 லட்சம் டன் கொப்பரையையும் அந்த மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
    Next Story
    ×