search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பீகார் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் குற்றப்பின்னணி கொண்ட 31 சதவீதம் பேர் போட்டி

    பீகார் சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தலில் குற்றப்பின்னணி கொண்ட 31 சதவீத வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 35 சதவீத வேட்பாளர்கள், கோடீசுவரர்கள் ஆவர்.
    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடக்கிறது. மொத்த தொகுதிகள் 243. அவற்றில், முதல்கட்டமாக 71 தொகுதிகளில் வருகிற 28-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

    இந்த முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 1,064 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்கள் தங்கள் மீதான கிரிமினல் வழக்குகள் விவரம், சொத்து விவரம் ஆகியவற்றை வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ளனர். அந்த தகவல்களை திரட்டி, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு, ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 31 சதவீதம் பேர் (328 வேட்பாளர்கள்) தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக கூறியிருப்பது தெரிய வந்துள்ளது.

    23 சதவீதம் பேர் (244 வேட்பாளர்கள்) தங்கள் மீது ஜாமீனில் விட முடியாத, 5 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கத்தக்க கடுமையான கிரிமினல் வழக்குகள் இருப்பதாக கூறியுள்ளனர்.

    ராஷ்டிரீய ஜனதாதளத்தில்தான் அதிகமான வேட்பாளர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களாக உள்ளனர்.

    35 சதவீத வேட்பாளர்கள் (375 பேர்) தங்களுக்கு கோடிக்கணக்கான சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளனர். ராஷ்டிரீய ஜனதாதள வேட்பாளர்களில்தான் அதிகமான (39 பேர்) கோடீசுவரர்கள் உள்ளனர்.

    ஐக்கிய ஜனதாதளத்தில் 31 பேரும், பா.ஜனதாவில் 24 பேரும், லோக் ஜனசக்தியில் 30 பேரும், காங்கிரசில் 14 பேரும் கோடீசுவரர்கள் ஆவர்.

    453 வேட்பாளர்கள் (43 சதவீதம்) தங்களுக்கு கடன்கள் இருப்பதாக கூறியுள்ளனர்.

    இந்த அறிக்கையை வெளியிட்ட ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் நிறுவனர் ஜெகதீப் சோகர் கூறியதாவது:-

    குற்றப்பின்னணி கொண்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு, அரசியல் கட்சிகளிடையே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எல்லா முக்கிய கட்சிகளுமே குற்றப்பின்னணி உடையவர்களை நிறுத்தி உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×