search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா
    X
    சித்தராமையா

    கலெக்டர்களிடம் பணம் இருந்தால் மக்களின் கஷ்டம் தீர்ந்துவிடுமா?: சித்தராமையா கேள்வி

    கலெக்டர்களிடம் பணம் இருந்தால் மக்களின் கஷ்டங்கள் தீர்ந்துவிடுமா? என்றும், இதுவரை யாருக்காவது வெள்ள நிவாரணம் கிடைத்துள்ளதா என்றும் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    எடியூரப்பாவின் அரசு கமிஷன் அரசு. இங்கு லஞ்சம் கொடுக்காமல் ஒரு பணியும் நடப்பது இல்லை. காங்கிரஸ் தொகுதிகளின் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களையும் இந்த அரசு நிறுத்திவிட்டது. சமுதாய பவன் கட்டிடங்ளின் கட்டுமான பணிகள் நிதி இல்லாமல் பாதியில் நின்றுள்ளன. 21-ந் தேதி (நாளை) வான்வழியாக வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். வெள்ளம் இருக்கும்போது வான்வழியாக ஆய்வு செய்வது சரி.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சாலை வழியாக பயணம் செய்து, நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டால் தான் அவர்களின் கஷ்டம் என்ன என்று தெரியும். விமானத்தில் பாதிப்புகளை பார்வையிட்டால், மக்களின் கஷ்டம் புரியுமா?. கடந்த 2019-ம் ஆண்டில் வெள்ளம் ஏற்பட்டது. மீண்டும் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி நேரில் வந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிடவில்லை. அவருக்கு கர்நாடகத்தின் மீது அக்கறை இல்லையா?.

    பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், தான் இருக்கும் பதவியின் தகுதி கூட அறியாதவர். என்னை அரசியலில் இருந்து ஒழித்துவிடுவதாக பலர் கூறினர். அது சாத்தியமாகவில்லை. இப்போது நளின்குமார் கட்டீல் அவ்வாறு கூறியுள்ளார். என்னை ஒழித்துவிடுவதாக கூறிய பலரை நான் பார்த்துள்ளேன். கர்நாடகத்தில் கூலித்தொழிலாளர்கள், நெசவாளர்கள் உள்பட பலர் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்து வருகிறார்கள்.

    இதை தடுக்க ஊரடங்கு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது இடிந்து விழுந்த வீடுகளுக்கே நிவாரணம் வழங்கவில்லை. தற்போது வெள்ளத்தால் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. முதல்-மந்திரி எடியூரப்பா, கலெக்டர்களின் வங்கி கணக்கில் தேவையான அளவுக்கு பணம் இருப்பதாக கூறுகிறார். கலெக்டர்களின் வங்கி கணக்கில் பணம் இருந்தால் மக்களின் கஷ்டம் தீர்ந்துவிடுமா?. இதுவரை யாருக்காவது நிவாரணம் கிடைத்துள்ளதா?.

    மத்திய குழு கர்நாடகம் வந்து முன்பு வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்டு சென்றது. இதுவரை மத்திய அரசு நிதி உதவியை அறிவிக்கவில்லை. வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், மத்திய அரசின் நிதி உதவி இன்று வருகிறது, நாளை வருகிறது என்று கூறி வருகிறார். கஷ்டத்தில் இருக்கும்போது மக்களுக்கு நிவாரண உதவியை வழங்காமல் வேறு எப்போது இந்த அரசு வழங்கப்போகிறது?.

    கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுக்கு நேரடி போட்டி உள்ளது. சிராவில் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இடையே போட்டி இருக்கிறது. இதில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறும்.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×