search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்காவில் 4 சிறுவர்கள் கோடரியால் கொலை செய்யப்பட்ட தோட்டத்து வீட்டில் போலீசார் விசாரணை நடத்தியபோது எடுத்தபடம்.
    X
    ஜல்காவில் 4 சிறுவர்கள் கோடரியால் கொலை செய்யப்பட்ட தோட்டத்து வீட்டில் போலீசார் விசாரணை நடத்தியபோது எடுத்தபடம்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் கோடரியால் வெட்டி படுகொலை

    ஜல்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் கோடரியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.
    மும்பை:

    ஜல்காவ் மாவட்டம் ராவர் தாலுகா போர்கேடா சிவார் கிராமத்தில் சேக் முஸ்தாக் என்பருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் மத்திய பிரதேச மாநிலம் கார்கானை சேர்ந்த மெக்தாப் குலாப் பிலாலா என்பவர் குடும்பத்தினருடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். இவர் உறவினர் ஒருவரின் இறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தனது சொந்த ஊருக்கு மனைவி, மூத்த மகனுடன் சென்றுவிட்டார்.

    தோட்டத்தில் உள்ள வீட்டில் அவரின் மற்ற பிள்ளைகளான சங்கீதா(வயது13), ராகுல்(11), அனில்(8), நானி(6) ஆகியோர் மட்டுமே இருந்தனர்.

    நேற்று அதிகாலை தோட்டத்திற்கு உரிமையாளர் சேக் முஸ்தாக் சென்றார். அப்போது சகோதர, சகோதரிகள் 4 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். மேலும் சம்பவம் குறித்து கிராமத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து ரத்த கரைபடிந்த கோடரி ஒன்றையும் கைப்பற்றினர்.

    போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சிறுவர், சிறுமிகள் 4 பேரும் கோடரியால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் கழுத்தில் ஆழமான வெட்டுகாயங்கள் இருந்தன.

     சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து கண்டறிய சிறப்பு படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் முண்டே கூறுகையில், “கொலையில் துப்பு கிடைக்க எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வருகிறோம்” என்றார்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகள் 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மராட்டியத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×