search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரூக் அப்துல்லா
    X
    பரூக் அப்துல்லா

    சீனாவின் உதவியுடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் - பரூக் அப்துல்லா சர்ச்சை பேச்சு

    சீனாவின் உதவியுடன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் என நம்பிக்கை உள்ளதாக பருக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. மேலும், அப்பகுதியை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.
     
    இந்த நடவடிக்கையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

    மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் முதல்மந்திரிகள், முக்கிய அரசியல் தலைவர்கள் உள்பட பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். தற்போது காஷ்மீரில் நிலைமை சீரடைந்ததையடுத்து வீட்டுக்காவலில் இருந்த முன்னாள் முதல் மந்திரிகளான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    வீட்டுக்காவலில் இருந்த மெகபூபா முப்தியூம் சமீபத்தில் விடுதலையானதையடுத்து, பரூக் அப்துல்லா வீட்டில் இன்று அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. 

    இந்த கூட்டத்தில் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முக்தி உள்ளிட்ட காஷ்மீரின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி (சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு முந்தைய நாள்) நடைபெற்ற அனைத்துக்கட்சிகள் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட குப்கார் பிரகடனம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    குப்கார் பிரகடனம் என்பது காஷ்மீரின் சுய ஆட்சி, சிறப்பு அந்தஸ்து, தனித்தன்மையை ஒருங்கிணைந்து பாதுகாக்க அனைத்து கட்சியும் துணைற்கும் என உறுதிபூண்டுள்ளனர். 

    மேலும், இந்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம் என தேசிய மாநாட்டுக்கட்சி, மக்கள் ஜனநாயககட்சி உள்பட காஷ்மீரின் முக்கிய அரசியல் (பாஜக, காங்கிரஸ் தவிர) கட்சிகள் இணைந்து எடுத்த முடிவாகும்.

    இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர் பேசிய தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா, ‘இந்த கூட்டணிக்கு ’குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி’ என பெயரிட்டுள்ளோம். நமது போராட்டம் அரசியலமைப்புக்கான போராட்டம். காஷ்மீர் மக்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு முன்னதாக கொண்டிருந்த உரிமைகளை இந்திய அரசு திருப்பித்தர வேண்டும் என
    கேட்டுக்கொள்கிறோம்’ என்றார்.

    காஷ்மீரில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம்

    இதற்கிடையில், கடந்த 11-ம் தேதி ’இந்தியா டுடே’ ஆங்கில ஊடகத்திற்கு பரூக் அப்துல்லா சிறப்பு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி இந்திய அரசு செய்த நடவடிக்கை (சிறப்பு அந்தஸ்து ரத்து) ஏற்றுக்கொள்ள முடியாதது. லடாக் எல்லையில் சீன ராணுவம் தற்போது ஆக்ரோஷமாக செயல்படுவதற்கு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டம் ரத்து செய்யப்பட்டதே காரணம் ஆகும்.

    காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை. சீனாவின் ஆதரவுடன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 மீண்டும் கொண்டுவரப்படும் என நான் நம்புகிறேன்.

    நான் ஒருபோது சீன அதிபரை அழைக்கவில்லை. மோடி ( இந்திய பிரதமர்) தான் சீன அதிபரை அழைத்தது மட்டுமல்லாமல் அவருடன் ஊஞ்சல் ஆடினார். அவர் (இந்திய பிரதமர் மோடி) சீன அதிபரை சென்னைக்கு அழைத்துக்கொண்டு அவருடன் உணவும் அருந்தியுள்ளார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×