search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன்
    X
    மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன்

    கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு : பண்டிகை, குளிர்காலத்தில் பொதுமக்கள் உஷார் - மத்திய மந்திரி வேண்டுகோள்

    கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் உஷாருடன் இருக்குமாறு மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து நாடு எப்போது விடுபடும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் கடந்த சில தினங்களாக தொற்று பரவல் குறைந்து வருகிறது. இது மக்களுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

    இந்த தருணத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள மத்திய மந்திரிகள் குழுவின் 21-வது கூட்டம், நேற்று காணொலி காட்சி வழியாக நடந்தது.

    இந்த கூட்டத்துக்கு மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் தலைமை தாங்கினார். கூட்டத்தின் தொடக்கத்தில் அவர் பேசும்போது, பல மாதங்களாக கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உறுதியுடன் போராடி வருகிற கொரோனா வீரர்களுக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

    பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா அளித்த உறுதியான பொது சுகாதார பதிலளிப்பால் ஊக்கம் அளிக்கும் முடிவுகள் ஏற்பட்டதாக அவர் கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில் கூறியதாவது:-

    வர உள்ள பண்டிகை காலத்திலும், குளிர்காலத்திலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு அகிகமாக உள்ளது. இந்த காலத்தில் பொதுமக்கள் ஏற்றவிதத்தில் உஷாருடன் நடந்து கொள்ள வேண்டும்.

    இந்தியாவில் இதுவரை 62 லட்சத்து 27 ஆயிரத்து 295 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தள்ளனர். இந்தியாவில் 86.78 என்ற அதிகபட்ச மீட்பு விகிதம் உள்ளது. ஆனால் இறப்புவீதம் உலகிலேயே குறைவான அளவாக 1.53 சதவீதம் இருக்கிறது.

    இரட்டிப்பு ஆகும் காலம் கடந்த 3 நாட்களில் 74.9 நாட்களாக வெற்றிகரமாக அதிகரித்துள்ளது.

    கொரோனா பரிசாதனைக்காக நாட்டில் 1,927 பரிசோதனைக்கூடங்கள் அமைந்திருப்பது, பரிசோதனையை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு நாளைக்கு 15 லட்சம் மாதிரிகள் என்ற அளவுக்கு இந்தியாவின் பரிசோதனைத்திறன் பெருகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 11 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

    பண்டிகைகள் கொண்டாடும்போது, நோய்கள் பரவுவதை தடுக்க பொருத்தமான நடத்தைகளை பின்பற்ற பொதுமக்களை ஊக்குவிப்பதற்காக பிரதமர் நாடு தழுவிய விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் டாக்டர் சுர்ஜித் கே சிங், கொரோனா வைரஸ் பெருந்தொற்றை கடடுப்படுத்துவதற்கு, தரவு சார்ந்த, தரப்படுத்தப்பட்ட அரசின் கொள்கைகள் எவ்வாறு உதவின என்பதைப்பற்றிய அறிக்கையை அளித்தார்.

    இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 86.36 சதவீதமாக இருக்கிறபோது, தத்ராநகர் ஹவேலி, டாமன், தியுவில் இது அதிகபட்சமாக 96.25 சதவீதமாக உள்ளது என கூறினார். அந்தமான் நிகோபாரில் இது 93.98 சதவீதம், பீகாரில் 93.89 சதவீதம் எனவும் குறிப்பிட்டார். கேரளாவில் இப்போது பாதிப்பு அதிகரித்து வருவதால் மீட்பு விகிதம் மிக குறைந்த அளவாக 66.31 சதவீதமாக இருப்பதாக தெரிவித்தார்.நிதி ஆயோக்கின் வினோத் கே. பால், இந்தியாவிலும், உலகமெங்கும் கொரோனா வைஸ் தடுப்பூசி உருவாக்கி வருவதின் முன்னேற்றங்கள் பற்றி எடுத்துரைத்தார்.
    Next Story
    ×