search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹத்ராஸ்
    X
    ஹத்ராஸ்

    கூட்டு பலாத்காரத்தால் பலியான ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினர் ஐகோர்ட்டில் ஆஜர்

    கூட்டு பலாத்காரத்துக்கு பலியான ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான பட்டியலின இளம்பெண், கடந்த மாதம் 14-ந் தேதி, 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 2 வார சிகிச்சைக்கு பிறகு, அப்பெண் டெல்லி ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். அவரது உடலை குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல் போலீசார் தகனம் செய்தனர்.

    இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியதால், அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளை, வழக்காக எடுத்துக்கொண்டது.

    இளம்பெண்ணின் குடும்பத்தினர் அக்டோபர் 12-ந் தேதி (நேற்று) ஐகோர்ட்டில் ஆஜராகி சம்பவத்தை விவரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கடந்த 1-ந் தேதி உத்தரவிட்டனர். அவர்கள் சொந்த ஊரில் இருந்து கோர்ட்டுக்கு பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜராவதை உறுதி செய்யுமாறு மாவட்ட நீதிபதியை கேட்டுக்கொண்டனர்.

    மேலும், மாநில கூடுதல் தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி., மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரும் 12-ந் தேதி நேரில் ஆஜராகி, விசாரணை நிலவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி, நேற்று காலை 6 மணிக்கு ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினர், தங்கள் வீட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். இளம்பெண்ணின் தாய், தந்தை, 3 சகோதரர்கள் ஆகியோருடன் மாவட்ட கலெக்டர் அஞ்சலி கங்வார், சர்க்கிள் அதிகாரி ஆகியோரும் சென்றனர்.

    நேற்று பிற்பகலில் அவர்கள் சென்ற வாகனம், லக்னோ கிளையை அடைந்தது.

    பிற்பகல் 2.15 மணிக்கு, நீதிபதிகள் பங்கஜ் மிதால், ராஜன் ராய் ஆகியோர் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினர், நீதிபதிகள் முன்பு ஆஜரானார்கள். அவர்கள் சம்பவம் குறித்து எடுத்துரைத்தனர்.
    Next Story
    ×