search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிக்கூடங்களை திறப்பது எப்போது? - மாநிலங்கள் ஆளுக்கொரு முடிவு

    கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் பள்ளிக்கூடங்கள் திறப்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு முடிவு எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை மூட மார்ச் 16-ந் தேதி உத்தரவிடப்பட்டது. மார்ச் 25-ந் தேதி நாடு தழுவிய ஊரடங்கு பொதுமுடக்கத்தை மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் நாட்டின் பொருளாதாரம், நாட்டு மக்களின் வாழ்வாதாரம் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி தொடங்கி தளர்வு நடவடிக்கைகள் பல்வேறு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கல்வி நிறுவனங்கள் மூடியே கிடக்கின்றன.

    இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை வரும் 15-ந் தேதிக்கு பின்னர் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும் இதில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இறுதி முடிவு எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டும் விதிகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. பள்ளி வளாகங்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், வருகைப்பதிவில் நெகிழ்வுத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும், 3 வாரங்களுக்கு மதிப்பீடு இல்லை, வீட்டு அடிப்படையிலான பள்ளிப்படிப்பில் இருந்து ஒரு சுமுகமான மாற்றத்தை உறுதி செய்தல் உள்ளிட்டவை அவற்றில் இடம்பெற்றன. மேலும், சுகாதாரம், பாதுகாப்பு முன் எச்சரிக்கைகள் தொடர்பாக உள்ளூர்நிலவரத்துக்கு ஏற்ப வழிகாட்டும் விதிகளை மாநிலங்கள் வகுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பள்ளிகளை திறப்பதில் மாநிலங்கள் இடையே ஒருமித்த முடிவு இல்லை. ஆளுக்கொரு முடிவு எடுத்துள்ளன. அதுபற்றி ஒரு பார்வை வருமாறு:-

    * டெல்லியில் பள்ளிகள் வரும் 31-ந் தேதி வரை மூடப்பட்டிருக்கும். அதன் பின்னர் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    * உத்தரபிரதேசத்தில் வரும் 19-ந் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

    * கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பில் அவசரம் காட்டப்போவதில்லை, அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    * சத்தீஷ்காரில் அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    * மராட்டியத்தில் தீபாவளி வரை பள்ளிகள் திறப்பதில்லை என்றும் அதன்பின்னர் முதல்-மந்திரி நிலைமையை ஆராய்ந்து முடிவு எடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    * குஜராத்திலும் தீபாவளிக்கு பின்னர் முடிவு எடுக்கப்படும்.

    * மேகாலயாவில் பெற்றோரின் கருத்துகள் கோரப்பட்டுள்ளன.

    * புதுச்சேரியில் கடந்த 8-ந் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

    * அரியானாவில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு பள்ளிகள் திறக்க பரிசீலிக்கப்படுகிறது.

    * ஆந்திராவில் நவம்பர் 2-ந் தேதி வரை பள்ளிகள் திறப்பதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    * மேற்கு வங்காளத்தில் அடுத்த மாதம் மத்தியில் முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×