search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சைதன்யா வெங்கடேஸ்வரன்
    X
    சைதன்யா வெங்கடேஸ்வரன்

    சர்வதேச பெண் குழந்தைகள் தினம் : டெல்லி இளம்பெண்ணுக்கு ஒருநாள் இங்கிலாந்து தூதர் பதவி

    தலைநகர் டெல்லியை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவி சைதன்யா வெங்கடேஸ்வரன் இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள இங்கிலாந்து தூதரகம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ‘ஒரு நாள் தூதர்’ என்ற போட்டியை நடத்தி வருகிறது. ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 11-ந் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்த போட்டி நடத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள 18 முதல் 23 வயது வரையிலான பெண்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும். போட்டியில் வெற்றி பெறும் நபர் இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரக ஒரு நாள் பதவி வகிப்பார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உலகளவில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டுதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

    சைதன்யா வெங்கடேஸ்வரன்


    அந்தவகையில் இந்த ஆண்டு போட்டிக்காக, கொரோனா சமயத்தில் பாலின சமத்துவத்திற்கான உலகளாவிய சவால்கள் மற்றும் வாய்ப்புகளை பற்றி ஒரு நிமிட வீடியோவை சமர்பிக்கும்படி இங்கிலாந்து தூதரகம் கேட்டிருந்தது.

    இந்த போட்டியில் தலைநகர் டெல்லியை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவி சைதன்யா வெங்கடேஸ்வரன் வெற்றி பெற்று இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த புதன்கிழமை ஒரு நாள் தூதராக பதவியேற்ற இவர், தூதரக துறை தலைவர்களுக்கு பணிகளை ஒதுக்கினார்.

    அதனைத் தொடர்ந்து மூத்த பெண் போலீஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடல், பத்திரிகையாளர்கள் சந்திப்பு மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்டெம் உதவித் தொகை திட்டத்தின் தாக்கத்தை ஆய்வு செய்வது போன்ற பணிகளையும் சைதன்யா வெங்கடேஸ்வரன் செய்தார்.

    இங்கிலாந்து தூதரகத்தின் இந்த போட்டியின் ஒருநாள் தூதராக பணியாற்றிய 4-வது பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×