search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யோகி ஆதித்யநாத்
    X
    யோகி ஆதித்யநாத்

    சாதி, மதம் ரீதியாக சமூகத்தை எதிர்க்கட்சிகள் பிரிக்க முயற்சி - யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

    சாதி, மதம் ரீதியாக சமூகத்தை பிரிக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் மீது உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் 7 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் 6 தொகுதிகளை பா.ஜனதாவும், ஒரு தொகுதியை சமாஜ்வாடியும் வைத்திருந்த நிலையில், இந்த தொகுதிகளை மீண்டும் வெல்வதில் ஆளும் பா.ஜனதா முனைப்பு காட்டி வருகிறது.

    ஏற்கனவே அரசுக்கு தேவையான பெரும்பான்மை இருந்தாலும், இந்த தொகுதிகளை வெல்வதை கவுரவ பிரச்சினையாக கருதுகிறார், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத். எனவே இந்த இடைத்தேர்தல் பணிகளில் அவர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார்.

    சமீபகாலமாக அவரது அரசு பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக சமீபத்திய ஹத்ராஸ் தலித் இளம்பெண் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் போலீசாரின் என்கவுண்ட்டர் போன்ற சம்பவங்களால் யோகி ஆதித்யநாத் மீது குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன.

    கொரோனாவுக்கு மத்தியில் முதன்முதலாக நடைபெறும் இந்த தேர்தல்களில் வெற்றிக்கொடியை நாட்ட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டு உள்ளது. அந்தவகையில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள தியோரியா சதர் சட்டசபை தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் மத்தியில் நேற்று அவர் மெய்நிகர் முறையில் உரையாற்றினார். அப்போது அவர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உத்தரபிரதேசத்தை சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் 15 ஆண்டுகள் ஆட்சி செய்தன. அப்போது வெறும் ஊழல்களும், அராஜகமுமே அவர்களது சாதனையாக இருந்தன. ஆனால் பிரதமர் மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்த இந்த 6 ஆண்டுகளில்தான் மாநிலத்தில் உண்மையான வளர்ச்சி தொடங்கியது. அனைத்து ரக வளர்ச்சி காரணமாக மக்களிடம் பா.ஜனதாவின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரிக்கிறது. மக்களிடம் நேர்மறை எண்ணங்களும் ஏற்பட்டு உள்ளன.

    இதனால் துயரமடைந்துள்ள எதிர்க்கட்சிகள் விரக்தியின் உச்சிக்கு சென்றுள்ளன. எனவே இந்த அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக எல்லாவித தந்திரங்களையும் மேற்கொண்டு வருகின்றன. அவர்களின் எண்ணங்கள் அனைத்தும் மோசமானவை. நோக்கங்கள் அபாயமானவை.

    பிரிவினை என்பது அவர்களது மரபணுவிலேயே இருக்கின்றன. அதன்படி முதலில் நாட்டை அவர்கள் துண்டாடினர். தற்போது சாதி, இனம், மத ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு தங்கள் சொந்த நலனே முக்கியம். மற்றவை எல்லாம் இரண்டாம்பட்சம்தான்.
    Next Story
    ×