search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோசடி
    X
    மோசடி

    திருமண ஆசைகாட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1.13 லட்சம் மோசடி- பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

    பெங்களூருவில், திருமண ஆசைகாட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1.13 லட்சத்தை மோசடி செய்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
    பெங்களூரு:

    பெங்களூரு மாரத்தஹள்ளியில் வசித்து வருபவர் ஹரிகிருஷ்ணா. இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். ஹரிகிருஷ்ணாவுக்கு, அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பெண் தேடிவந்தனர். இதற்காக தனியார் திருமண தகவல் மையத்தில் ஹரிகிருஷ்ணாவும் பதிவு செய்து இருந்தார். அந்த திருமண தகவல் மையம் மூலமாக அவருக்கு திவ்யஜோதி என்ற இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்தது.

    பின்னர் ஹரிகிருஷ்ணாவை திருமணம் செய்ய விரும்புவதாக திவ்யஜோதி கூறினார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். அப்போது தான் லண்டனில் வசிப்பதாகவும், திருமணத்திற்கு முன்பாக உங்களை பார்க்க பெங்களூருவுக்கு வருவதாகவும் ஹரிகிருஷ்ணாவிடம் திவ்யஜோதி கூறி இருந்தார்.

    கடந்த 5-ந் தேதி ஹரிகிருஷ்ணாவை தொடர்பு கொண்ட அவர், லண்டனில் இருந்து டெல்லி வந்திருப்பதாகவும், கொரோனா பரிசோதனை செய்ததற்கான அறிக்கையை வைத்துவிட்டு வந்து விட்டதாகவும், மீண்டும் பரிசோதனை நடத்துவதற்கு தன்னிடம் இந்திய பணம் இல்லாததால் ரூ.25 ஆயிரம் அனுப்பி வைக்கும்படியும் கூறியுள்ளார். அதன்படி, அவரும் ரூ.25 ஆயிரம் அனுப்பி வைத்துள்ளார். மறுநாள் (6-ந் தேதி) தான் பெங்களூருவுக்கு வந்திருப்பதாகவும், தன்னிடம் உள்ள வெளிநாட்டு பணம், பரிசு பொருட்களுக்கு வரி செலுத்த ரூ.86 ஆயிரம் வேண்டும் என்றும் ஹரிகிருஷ்ணாவிடம் திவ்யஜோதி கேட்டுள்ளார்.

    உடனே ரூ.86 ஆயிரத்தை அவரது வங்கி கணக்கிற்கு ஹரிகிருஷ்ணா அனுப்பியுள்ளார். அதன்பிறகு, திவ்யஜோதியின் செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டதால், அவரை தொடர்பு கொள்ள ஹரிகிருஷ்ணாவால் முடியவில்லை. தன்னிடம் திவ்யஜோதி ரூ.1.13 லட்சம் வாங்கி மோசடி செய்ததை உணர்ந்த ஹரிகிருஷ்ணா, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை வலைவீசி தேடிவருகிறார்கள்.
    Next Story
    ×