
மத்திய ரசாயனத்துறை மந்திரி சதானந்தகவுடா மைசூருவுக்கு வந்தார். மைசூருவில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்தி உள்ள புதிய வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். அந்த மசோதாக்கள் விவசாயத்துறையில் புதிய வளர்ச்சியை ஏற்படுத்தும். மேலும் விவசாயிகளுக்கு 2 மடங்கு லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி விவசாயத்துறையில் பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறார்.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கூடுதல் விலையும் கிடைக்கும். மேலும் விவசாயிகளுக்காக கிசான் கார்டு, சுகாதார திட்டம், குறைந்த வட்டிக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்குவது, ஆன்லைன் மூலமாக விவசாய விளைபொருட்களை விற்பனை செய்வது, ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்குவது, உரம் மற்றும் விதைகளை வழங்குவது இப்படி ஏராளமான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி உள்ளார்.
மத்திய அரசு விவசாயத்துறை வளர்ச்சிக்காக ரூ.ஒரு லட்சம் கோடி நிதியை ஒதுக்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.