search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    உலகத்துக்கே மருந்தகமாக இந்தியா திகழ்கிறது - பிரதமர் மோடி பெருமிதம்

    150 நாடுகளுக்கு இதுவரை மருந்துகள் அளித்துள்ளோம். உலகத்துக்கே மருந்தகமாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
    புதுடெல்லி:

    கனடாவில், ‘இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்’ என்ற மாநாடு நடந்து வருகிறது. இந்தியா-கனடா இடையிலான வர்த்தக உறவை அதிகரிக்கவும், இந்தியாவில் முதலீடு செய்ய கனடா தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவும் இந்த மாநாடு நடக்கிறது.

    காணொலி காட்சி மூலமாக நேற்று இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:-

    கொரோனா பரவலுக்கு பிறகு, ஒவ்வொருவரும் அடிக் கடி எண்ணற்ற பிரச்சினைகளை கேள்விப்படுகிறோம். உற்பத்தி பிரச்சினை, வினியோக பிரச்சினை, பாதுகாப்பு கவச உடை பிரச்சினை என ஏராளமான பிரச்சினைகள்.

    ஆனால், இந்த பிரச்சினைகளை இந்தியா நீடிக்கவிடவில்லை. நெகிழ்வுத்தன்மையுடன் செயல்பட்டு, தீர்வுக்கான நாடாக உருவெடுத்துள்ளோம்.

    இதுவரை 150 நாடுகளுக்கு மருந்துகள் அளித்துள்ளோம். உலகத்துக்கே மருந்தகமாக இந்தியா திகழ்கிறது. கல்வி, தொழிலாளர், வேளாண்மை ஆகிய துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.

    தனியார் துறையையும் அதில் ஈடுபடுத்தி உள்ளோம். இது, தொழில் முனைவோர், கடினமாக உழைக்கும் மக்கள் என இருதரப்புக்கும் பலன் அளிக்கும்.

    இந்தியாவில் மனப்போக்கிலும், சந்தையிலும் விரைவான மாற்றங்கள் நடந்து வருகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக, ஏழைகளுக்கும், சிறு, குறு நிறுவனங்களுக்கும் ஊக்கச்சலுகைகள் அளித்துள்ளோம். கம்பெனி சட்டத்தில், பல குற்றங்களை குற்றப்பட்டியலில் இருந்து நீக்கி உள்ளோம்.

    கடுமையான ஊரடங்கையும் மீறி, கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம்வரை இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

    ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்கு முன்பு என்னென்ன எதிர்பார்ப்பீர்கள்?

    அந்த நாட்டில் துடிப்பான ஜனநாயகம் இருக்கிறதா? அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கிறதா? முதலீட்டுக்கு சாதகமான கொள்கைகள் இருக்கிறதா? திறமையான மக்கள் இருக்கிறார்களா? என்பதைத்தானே.

    இவை அனைத்தும் இருக் கும் ஒரே நாடு, இந்தியாதான்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
    Next Story
    ×