search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    சொகுசு விமானம்
    X
    சொகுசு விமானம்

    சொகுசு விமானம் விவகாரம்- முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஆர்டர் கொடுத்ததாக தகவல்

    அதிநவீன வசதிகளுடன் கூடிய சொகுசு விமானம் வாங்கும் நடைமுறை முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது தொடங்கியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    புதுடெல்லி:

    நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணம் செய்வதற்காக பிரத்யேகமாக ரூ.8,400 கோடி செலவில் உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் 2 ‘ஏர் இந்தியா ஒன்’ என்ற சொகுசு விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில், ஒரு விமானம் போயிங் நிறுவனத்திடம் இருந்து வந்து சேர்ந்துள்ளது. மற்றொரு விமானம் விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
      
    அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பயன்படுத்தும் 'ஏர்போர்ஸ் ஒன்' என்ற அதிநவீன விமானத்தில் உள்ள அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களும் ‘ஏர் இந்தியா ஒன்’ விமானத்தில் உள்ளது.

    'ஏர் இந்தியா ஒன்' விமானம் 43,100 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது. விமானத்துக்குள் அலுவலகம், கூட்ட அரங்கு, படுக்கை அறை, சமையல் அறை, 2,000 பேர் சாப்பிடுவதற்குத் தேவையான உணவுப் பொருட்களை வைக்கும் கிடங்கு, செயற்கைக்கோள் தொலைபேசி, இணைய வசதி, மருத்துவ அறுவை சிகிச்சை அறை, மருத்துவக் குழுவினர் தங்கும் அறை, பாதுகாப்பு வீரர்கள் தங்கும் அறை, விஐபிக்கள் தங்கும் அறை என அனைத்து வசதிகளும் உள்ளன. ஏவுகணைத் தடுப்பு பாதுகாப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்த விமானங்களை மத்திய அரசு வாங்கியது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.

    ''பிரதமர் மோடி மக்கள் பணத்தை வீணாக்கி ரூ.8 ஆயிரம் கோடியில் இரு விமானங்களை வாங்கியுள்ளார். அங்கு அவரின் வசதிக்காக சொகுசு மெத்தைகளை அமைத்துள்ளார். ரூ.8 ஆயிரம் கோடிக்கு இரு விமானங்களை வாங்கிய பிரதமர் மோடியிடம் ஏன் நீங்கள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அவரிடம் எந்தக் கேள்வியையும் யாரும் கேட்காதது எனக்கு வியப்பாக இருக்கிறது. ஆனால், அனைவரும் நான் டிராக்டரில் அமர்ந்தபோது அதிலிருந்த குஷன் இருக்கை குறித்தே கேட்கிறீர்கள். 

    நமது எல்லையில் சீனப் படைகள் நிறுத்தப்படுகின்றன. அடுத்துவரும் குளிர்காலத்தையும் பொருட்படுத்தாமல் நமது ராணுவ வீரர்கள் நம்மைப் பாதுகாத்து வருகிறார்கள். அவர்களுக்காக ஆயுதங்கள், எரிபொருள், உணவுகள், குளிர்காலத்துக்குத் தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்படும்போது இவ்வளவு பெரிய தொகையில் விமானம் தேவையா?'' என்று ராகுல் கேள்வி எழுப்பியிருந்தார்.

    ஆனால் இந்த விவிஐபி விமானங்களை கொள்முதல் செய்யும் நடைமுறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தொடங்கப்பட்டதாகவும், தற்போதைய மோடி அரசு அதனை முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    “தற்போது பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பயன்படுத்திவரும் ஏர் இந்தியா விமானம் 25 ஆண்டுகள் பழமையானது. அந்த விமானங்களால் ஐரோப்பா, அட்லாண்டிக் நாடுகளுக்கு நீண்ட தொலைவு பயணிக்க இயலாது. பயணத்தின்போது குறிப்பிட்ட ஏதாவது ஒரு நாட்டில் இறங்கி விமானத்துக்கு எரிபொருள் நிரப்பி பராமரிப்புக்குப் பின்புதான் செல்ல முடியும்.

    ஆனால், இந்த இரு விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில்தான் கொள்முதல் குழு, அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையில் அமைக்கப்பட்டது.

    அமைச்சரவைச் செயலாளர்கள் குழுவின் வழிகாட்டலின்படி, அமைச்சகங்கள் குழுக்கள் விமானக் கொள்முதல், மேலாண்மை, பயன்பாடு ஆகியவை குறித்து முடிவு செய்யப்பட்டது. 2013-ம் ஆண்டு ஆகஸ்டில் இந்த விமானம் விமானப் படைக்கு மாற்றப்பட்டது.

    2011 முதல் 2012-வரை இந்த விமானங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பாக அப்போதைய காங்கிரஸ் அரசில் 10 முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது” என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×