search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ரெயில்
    X
    ரெயில்

    நவராத்திரி, தீபாவளிக்கு 200 சிறப்பு ரெயில்கள்

    வருகிற 15-ந்தேதி முதல் அடுத்த மாதம் 30-ந்தேதி வரை நவராத்திரி, தீபாவளிக்கு 200 சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே துறை முடிவு செய்து உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா அதிகமாக பரவியதையடுத்து கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில் நாடு முழுவதும் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

    அதன்பிறகு வெளிமாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக ஒருசில சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

    பின்னர் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில் ரெயில் சேவைகளும் படிப்படியாக பல இடங்களுக்கு தொடங்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 310 ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    அடுத்ததாக மேலும் 78 ரெயில்களை இயக்க மத்திய ரெயில்வேதுறை முடிவு செய்துள்ளது. இதில் ஏ.சி. எக்ஸ்பிரஸ் ரெயில்கள், துரந்தோ, வந்தே பாரத், ராஜ்தானி, சதாப்தி ஆகிய ரெயில்களும் அடங்கும்.

    மேலும் தனியார் மூலம் இயக்கப்படும் தேஜஸ் ரெயில்களும் இயக்கப்பட இருக்கின்றன. இந்த ரெயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்ட அட்டவணையின் அடிப்படையில் பயணம் செய்யும்.

    விரைவில் இந்த ரெயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. அவை தொடங்கப்படும் தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்பட இருப்பதாக ரெயில்வே துறை கூறி உள்ளது.

    இதில் தனியார் ரெயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் அக்டோபர் 17-ந் தேதி முதல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில்கள் லக்னோ-டெல்லி இடையேயும், அகமதாபாத்- மும்பை இடையேயும் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்தன. 7 மாதங்களுக்கு பிறகு இவை இயக்கப்பட இருக்கின்றன.

    புதிதாக 78 ரெயில்கள் இயக்கப்படுவதன் மூலம் மொத்த ரெயில்களின் எண்ணிக்கை 388ஆக உயரும். இவ்வாறு அதிக ரெயில்கள் இயக்கப்படுவதால் படிப்படியாக பழைய நிலைக்கு ரெயில் போக்குவரத்து திரும்பி வருகிறது.

    இதற்கிடையே நவராத்திரி, துர்க்கா பூஜை, தீபாவளி, வட மாநில விவசாய திருவிழாக்கள் என பண்டிகை காலம் வருகிறது. இதனால் மக்கள் இடம்பெயர்வு அதிகரிக்கும். அதற்கு வசதியாக 200 சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே துறை முடிவு செய்து உள்ளது.

    இந்த ரெயில்கள் வருகிற 15-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி வரை இயக்கப்படும்.

    வருகிற 17-ந் தேதி நவராத்திரி தொடங்குகிறது. 25-ந் தேதி ஆயுதபூஜை நடக்கிறது. நவம்பர் 14-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே இதன்தேவைக்கு ஏற்றாற்போல் ரெயில்கள் இயக்கப்படும். பண்டிகை தேதியின் அடிப்படையில் முன்பதிவு தேதியும் அறிவிக்கப்படும்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும் போது, “பண்டிகை கால 200 ரெயில்களில் தெற்கு ரெயில்வே மூலம் 10 ரெயில்கள் இயக்க வாய்ப்பு உள்ளது. இந்த ரெயில்கள் பெரும்பாலும் ஏ.சி. ரெயில்களாக இயக்கப்படும். சென்னை- சந்திரகாசி (வாரத்தில் இரு முறை), சென்னை-நிஜாமுதீன் துரந்தோ எக்ஸ்பிரஸ், சென்னை-பெங்களூர் டபுள் டக்கர், சென்னை- பெங்களூர் சதாப்தி, சென்னை-கோவை சதாப்தி ஆகிய ரெயில்கள் உள்ளிட்ட சிறப்பு ரெயில்கள் இயக்க வாய்ப்பு உள்ளன” என்றார்.

    கொரோனா பரவலை தடுப்பதற்காக ரெயிலில் செல்லும் பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி அனைத்து பயணிகளும் ‘ஆரோக்கிய சேது’ செயலியை டவுன்லோடு செய்து வைத்திருக்க வேண்டும்.

    ரெயிலில் ஒரு இருக்கைக்கு அடுத்த இருக்கை காலியாக விடப்பட்டிருக்கும். பயணிகளுக்கு கொரோனா பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படும். சானிடைசர், ஒரு மாஸ்க், ஒரு பேஸ் ஷீல்டு, ஒரு ஜோடி கையுறை ஆகியவை அதில் இருக்கும்.

    பயணிகள் ரெயிலில் ஏறுவதற்கு முன்பாக அவர்களுக்கு வெப்ப நிலை சோதனை நடத்தப்படும். ரெயில் பயணிகள் மூலம் எந்த வகையிலும் நோய் பரவி விடாமல் தடுப்பதற்காக ரெயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருப்பது உள்ளிட்டவற்றை முழுமையாக செய்ய இருப்பதாக ரெயில்வே துறை கூறி உள்ளது.

    சமையலறை பெட்டி, கழிவறை, பயணிகள் அடிக்கடி தொடக்கூடிய இடங்கள், டிராலி போன்றவை கிருமி நாசினிகளால் அடிக்கடி சுத்தப்படுத்தப்படும்.

    பயணிகள் முன்பதிவு செய்யும் போது அவர்களுக்கு கொரோனா பாதுகாப்பு தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்படும்.
    Next Story
    ×