search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடல் சுரங்கப்பாதை
    X
    அடல் சுரங்கப்பாதை

    பொறுப்பற்ற சுற்றுலா பயணிகளால் அடல் சுரங்கப்பதையில் 3 நாட்களில் 3 விபத்துகள்

    பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட உலகின் நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் மூன்று நாட்களில் 3 விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
    மணாலி:

    இமாச்சல பிரதேசத்தில் மணாலி-லஹால் ஸ்பிடி பள்ளத்தாக்கை இணைக்கும் வகையில் மலையை குடைந்து சுரங்கப்பாதை (அடல் சுரங்கப்பாதை) உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் மிக நீளமான இந்த நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை பிரதமர் மோடி கடந்த 3ம் தேதி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

    9.02 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ள இந்த சுரங்கப்பாதை மூலம் எல்லா வானிலை காலத்திலும், மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்குக்கு செல்ல முடியும். மணாலி-லே இடையிலான தூரம் 46 கி.மீ. குறைந்துள்ளது. இருவழி சுரங்கப்பாதையான இந்த சாலையில், வாகனங்கள் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்லலாம். இந்த சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வந்ததால் வாகன ஓட்டிகள் உற்சாகமடைந்துள்ளனர். 

    இந்நிலையில், சுரங்கப்பாதை திறக்கப்பட்ட 3 நாட்களில் 3 விபத்துகள் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பொறுப்பற்ற செயலால் இந்த விபத்துகள் ஏற்பட்டதாக சுரங்கப்பாதையின் தலைமை பொறியாளர் புருசோத்தமன் தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், ‘சுரங்கப் பாதையின் இடையில் வாகனத்தை நிறுத்தி செல்பி எடுத்துக் கொண்டிருப்பது அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனங்கள் சென்றன. வாகனங்கள் முந்துவதற்கு சுரங்கப்பாதைகள் அனுமதி இல்லை என்ற நிலையில் ஒரு சில வாகனங்கள் முந்திச் செல்ல முயன்றன. இதனால் தான் இந்த விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. 

    சுரங்கப்பாதையில் வாகன ஓட்டிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். சுரங்கப்பாதையில் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனத்தை நிறுத்தி செல்பி எடுத்துக் கொண்டிருப்பது மற்ற வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. 

    சுரங்கப்பாதையில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து  குலு மற்றும் லஹால்-ஸ்பிட்டி காவல்துறை கண்காணிப்பாளர்களிடம் பேசியுள்ளேன். இதுதொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வகுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.
    Next Story
    ×