search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிகே சிவக்குமார்
    X
    டிகே சிவக்குமார்

    விசாரணைக்கு ஆஜராக டி.கே.சிவக்குமாருக்கு, சி.பி.ஐ. நோட்டீசு?

    விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு, சி.பி.ஐ. அதிகாரிகள் நோட்டீசு கொடுத்தார்களா? என்பதற்கு வக்கீல் பதில் அளித்து உள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருபவர் டி.கே.சிவக்குமார். இந்த நிலையில் சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள் உள்பட 14 இடங்களில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூ.57 லட்சம் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சிக்கியதாகவும், அவர்கள் அதை எடுத்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு, சி.பி.ஐ. அதிகாரிகள் நோட்டீசு வழங்கியதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் டி.கே.சிவக்குமாருக்கு, சி.பி.ஐ. அதிகாரிகள் நோட்டீசு வழங்கினார்களா என்று அவரது வக்கீல் பொன்னன்னாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் பதில் அளிக்கையில் கூறியதாவது:-

    டி.கே.சிவக்குமார் வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். அப்போது அவரது வீட்டில் இருந்து ரூ.57 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் டி.கே.சிவக்குமாரின் வீட்டில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் பணம் எதையும் பறிமுதல் செய்யவில்லை. மேலும் விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு, சி.பி.ஐ. அதிகாரிகள் நோட்டீசும் கொடுக்கவில்லை. எங்களிடம் அனைத்து சட்ட ஆவணங்களும் தயாராக உள்ளன. ஒருவேளை விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. அதிகாரிகள், டி.கே.சிவக்குமாருக்கு நோட்டீசு அனுப்பினால் அதுபற்றி விவாதிப்போம். நாங்கள் சட்ட போராட்டத்திற்கு தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் சி.பி.ஐ. விசாரணையில் இருந்து தப்பிப்பது தொடர்பாக நேற்று டி.கே.சிவக்குமார் 20 வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், சி.பி.ஐ. விசாரணைக்கு நாம் ஆளாவோம் என்று அறிந்த டி.கே.சிவக்குமார் கடந்த ஒரு வருடமாக, வழக்கு விசாரணைக்கு தயாராகி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டால், தனக்கு ஆதரவாக வாதாட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வக்கீலுமான கபில்சிபல், உதய்ஹொல்லா ஆகியோரிடம் டி.கே.சிவக்குமார் பேசி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×