search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷ்ரேயாசி சிங்
    X
    ஷ்ரேயாசி சிங்

    கட்சியில் இணைந்த 2 நாட்களில் பீகார் தேர்தலில் போட்டியிட துப்பாக்கி சுடுதல் வீராங்கனைக்கு வாய்ப்பு வழங்கியது பாஜக

    துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஷ்ரேயாசி சிங் கட்சியில் இணைந்த 2 நாட்களில் அவர் பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.
    புதுடெல்லி:

    பீகார் மாநிலம் கிதாவூரில் 1991ம் ஆண்டு பிறந்தவர் ஷ்ரேயாசி சிங். மறைந்த முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங்கின் மகளான இவர், இந்திய துப்பாக்கி சுடும் அணியில் இணைந்து பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

    2018ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம், 2014ல் கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றார்.

    இதுதவிர டெல்லி காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டி, பிரிஸ்பேனில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 
    ஆசிய போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். அவருக்கு 2018ம் ஆண்டு மத்திய அரசின் அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

    இதற்கிடையில், ஷ்ரேயாசி சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை (4.10.2020) புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைத்து அக்கட்சியின் தேசியத்தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

    இந்நிலையில், பீகாரில் இம்மாத இறுதியில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அம்மாநில தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் நேற்று (6.10.2020) வெளியிடப்பட்டது.
     
    அதில், ஜமுய் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட துப்பாக்கிச்சூடு வீராங்கனை ஷ்ரேயாசி சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    கட்சியில் சேர்ந்து இரண்டு நாட்களே (4.10.2020) ஆன நிலையில் ஷ்ரேயாசி சிங் சட்டசபை தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ள நிகழ்வு பீகார் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
    Next Story
    ×