search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    கொரோனா தொற்று சமூக பரவல் நிலையை எட்டியுள்ளது - மம்தா பானர்ஜி சொல்கிறார்

    இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலையை எட்டியுள்ளதாக மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
    கொல்கத்தா:

    உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்க, அதைத் தொடர்ந்து இந்தியா இருக்கிறது. அமெரிக்காவைப்போல அதிக உயிரிழப்புகளை இந்தியா பெறாவிட்டாலும், தொற்று பாதிப்பில் இரு நாடுகளுக்கு இடையே சுமார் 11 லட்சம் மட்டுமே வித்தியாசம் உள்ளது.

    அதுமட்டுமின்றி நாள்தோறும் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட புதிய பாதிப்புகளையும் இந்தியா பெற்று வருகிறது. இதைப்போல சுமார் 1000 புதிய மரணங்களையும் சந்தித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதில் மத்திய-மாநில அரசுகளுக்கும், மருத்துவத்துறைக்கும் பெரும் சவாலாகவே உள்ளது.

    இவ்வாறு கட்டுக்கடங்காமல் கொரோனா பரவி வருவதால், இந்தியாவில் அது சமூக பரவல் நிலையை அடைந்திருப்பதாக மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    இதைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அதாவது எங்கள் வீட்டில் நாங்கள் 2 அல்லது 3 பேர் இருப்போம். நான் வீட்டுக்கு சென்றதும் எனக்கு தேநீர் தரும் சிறுவனுக்கு, நேற்று (நேற்று முன்தினம்) தொற்று ஏற்பட்டு இருக்கிறது. எனது அலுவலகத்தில் மற்றொரு சிறுவன் தொலைபேசி ஆபரேட்டராக பணியாற்றுகிறான். அவனுக்கு இன்று (நேற்று) தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கெல்லாம் என்ன பொருள்? சமூக பரவல்தான். இந்த சிறுவர்கள் வெளியில் எங்கும் செல்வதில்லை. எனினும் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

    எனவே இப்போது கொரோனா தொற்று சமூக பரவல் கட்டத்தில் உள்ளது. பல முன்னெச்சரிக்கைகள், இவ்வளவு பாதுகாப்பு, இன்னும் அவற்றையெல்லாம் நிறுத்த முடியாது. நாங்கள் ஏற்கனவே 3 எம்.எல்.ஏ.க்களை கொரோனாவால் இழந்திருக்கிறோம். எங்கள் தலைவர்கள் பலர் மரணமடைந்து உள்ளனர்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

    கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் மாநிலங்களில் மேற்கு வங்காளமும் ஒன்றாகும். அங்கு நேற்று முன்தினம் உருவான 3,340 புதிய நோயாளிகளையும் சேர்த்து, மாநிலத்தில் 2,66,974 பேர் தொற்று பாதித்துள்ளனர். இதில் 5,132 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×