search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹத்ராஸ் பெண்ணின் சகோதரன்
    X
    ஹத்ராஸ் பெண்ணின் சகோதரன்

    ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை - ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை வேண்டும் - உயிரிழந்த பெண்ணின் சகோதரன் வேண்டுகோள்

    ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என உயிரிழந்த பெண்ணின் சகோதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் வயலில் புல் அறுக்கச்சென்ற 19 வயதான பட்டியல் இன இளம்பெண்ணை அப்பகுதியை சேர்ந்த உயர்வகுப்பை சேர்ந்த 4 பேர் கடத்திச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்த பெண் தனக்கு நடந்த கொடூரத்தை வெளியே சொல்லிவிடக்கூடாது என்பதற்காக இளம்பெண்ணை கடுமையாக தாக்கினர்.

    இதில் அந்த இளம்பெண்ணின் கழுத்து பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது.

    அந்த கும்பலின் தாக்குதலில் படுகாயம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண், ரத்த வெள்ளத்தில் வயல்வெளிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். 

    இதையடுத்து, ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த அந்த இளம்பெண் கடந்த கடந்த 29-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    அதன் பின் உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை சொந்த ஊர் கொண்டுவந்த உத்தரபிரதேச போலீசார் குடும்பத்தினரின் அனுமதி இன்றி இறுதிச்சடங்கு
    நடைமுறைகளை மேற்கொண்டுனர். 

    மேலும், உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை குடும்பத்தினர் இறுதியாக ஒரு முறை கூட பார்க்க விடாத உத்தரபிரதேச போலீசார் குடும்பத்தாரை வீட்டில் அடைத்து வைத்து விட்டு உயிரிழந்த பெண்ணின் உடலை போலீசாரே தகனம் செய்தனர். 
     
    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூர செயலில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கையுடம் பொதுமக்களும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை பத்திரிக்கையாளர்களும், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சந்திக்க முற்பட்டனர். 

    ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்கவோ அல்லது அந்த கிராமத்திற்கு செல்லவோ உத்தரபிரதேச போலீசார் அனுமதி வழங்காமல் இருந்தனர். பின்னர் ஊடகங்கள், எதிர்க்கட்சிகளின் தொடர் கேள்விக்கனைகளையடுத்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க போலீசார் அனுமதியளித்தனர்.  

    இதற்கிடையில், இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்தினரை மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் சில காவல் அதிகாரிகள் மிரட்டியது போன்ற வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது.

    இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அம்மாநில முதல்மந்திரியான யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

    இந்த விவகாரத்தால் குற்றவாளிகளை உத்தரபிரதேச அரசு பாதுகாக்க முற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், இந்த சம்பவத்தில் பல்வேறு உண்மைகள் மறைக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட
    பெண்ணின் குடும்பத்தினர் அதிகாரிகளால் மிரட்டப்படுவதாகவும் பல தரப்பும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

    இந்நிலையில், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், இந்த வழக்கு விசாரணையை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கோரிக்கை விடுத்துள்ளார். 

    மேலும், தங்கள் குடும்பத்தினரை மிரட்டும் வகையில் நடந்துகொண்ட ஹத்ராஸ் மாவட்ட மாஜித்ரேட் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதற்கிடையில், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×