search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர்
    X
    முன்னாள் மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர்

    பஞ்சாப்: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய முன்னாள் மத்திய மந்திரி ஆதரவாளர்களுடன் கைது

    மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப்பில் போராட்டம் நடத்திய முன்னாள் மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் தனது ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டார்.
    அமிர்தசரஸ்:

    மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்கள் சட்டமாகி உள்ள நிலையில், இந்த மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய சிரோமணி அகாலி தளம் சார்பிலும் பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், பஞ்சாப்பின் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்ற நிலையில் இரவு மொகாலி மாவட்டத்தில் திரண்ட விவசாயிகளும், சிரோமணி அகாலி தளம் கட்சியினரும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இந்த போராட்டத்தை சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரும், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியின் மந்திரி சபையில் இருந்து ராஜினாமா செய்தவருமான முன்னாள் மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் தலைமை தாங்கினார்.

    மொகாலியின் சிரக்பூர் பகுதியில் போராட்டக்காரர்கள் பேரணிகாக செல்ல முற்பட்டபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

    மேலும், போராட்டக்காரர்கள் உடனடியாக கலைத்து செல்லவேண்டும் என தெரிவித்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறியதால் அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய முன்னாள் மத்திய மந்திரியான ஹர்சிம்ரத் கவுரையும் போலீசார் கைது செய்தனர்.

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக  நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×