search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையில் நடந்து சென்ற பிரியங்கா காந்தி
    X
    சாலையில் நடந்து சென்ற பிரியங்கா காந்தி

    ஹத்ராஸ் வன்கொடுமை: ஆறுதல் கூற சென்றபோது வாகனத்தை தடுத்த போலீசார்... சாலையில் நடந்து சென்ற பிரியங்கா

    ஹத்ராஸ் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தியின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கடந்த 14-ம் தேதி வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரை 4 நபர்கள் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்த பெண், சிகிச்சை பலனின்றி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதையும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 4 பேரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக தூக்கிலிடவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்களும் நடைபெறுகின்றன. இந்த விவகாரத்தில் மாநில பாஜக அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக பிரியங்கா, ராகுல் காந்தி ஆகியோர் புறப்பட்டனர். ஆனால், அவர்கள் வருவதற்கு முன்னதாக, ஹத்ராசில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் கிராமத்திற்குள் நுழைவதற்கு ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

    பிரியங்கா காந்தி வந்த வாகனத்தை யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து ஹத்ராஸ் நோக்கி பிரியங்கா காந்தி நடக்கத் தொடங்கினார். அவருடன் காங்கிரஸ் கட்சியினரும் நடந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×