search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக சிவசேனா
    X
    பாஜக சிவசேனா

    அடுத்த 4½ ஆண்டுகளில் அதிகாலை அரசியல் நிகழாது: பாஜக மீது சிவசேனா தாக்கு

    பாரதீய ஜனதா அதிகாலை அனுபவத்தை முன்பு முயற்சி செய்து பார்த்தது. ஆனால் அது 72 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது. அடுத்த 4½ ஆண்டுகளில் அதிகாலை அரசியல் எதுவும் நிகழாது என்று பாரதீய ஜனதாவை சிவசேனா தாக்கி உள்ளது.
    மும்பை :

    மகாராஷ்டிராவில் அடுத்த 4½ ஆண்டுகளில் அதிகாலை அரசியல் நிகழாது என்று பாரதீய ஜனதாவை சிவசேனா தாக்கி உள்ளது.

    மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி அதிகாலை அரசியல் பூகம்பம் ஏற்பட்டது. உத்தவ் தாக்கரே தலைமையில் மகா விகாஸ் அகாடி அரசு பதவி ஏற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவாருடன் கைகோர்த்து தேவேந்திர பட்னாவிஸ் திடீர் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பாரதீய ஜனதா தலைமையிலான இந்த அரசு 4 நாட்களிலேயே கவிழ்ந்தது.

    தற்போது தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி நடந்து வரும் நிலையில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் சமீபத்தில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சந்தித்து பேசியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்றும் விறுவிறுப்பாக பேசப்படுகிறது.

    ஆனால் சிவசேனா கட்சி பத்திரிகையான நிர்வாக ஆசிரியர் என்ற அடிப்படையில், எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசை பேட்டி காணுவது தொடர்பாக பேசவே சந்தித்தேன் என்று சஞ்சய் ராவத் விளக்கம் அளித்தார். இதே கருத்தை தேவேந்திர பட்னாவிசும் கூறினார்.

    ஆனால் பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், ஒரு சிறந்த காலைநேரம் நிகழும் என்று குண்டை தூக்கி போட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி நடந்த அரசியல் மாற்றத்தை குறிப்பிட்டு அவர் இந்த கருத்தை கூறியிருந்தார்.

    இதனால் சிவசேனாவின் கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கலக்கத்திலும், அதிருப்தியிலும் உள்ளதாக கூறப்படுகிறது. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதால், சஞ்சய் ராவத், தேவேந்திர பட்னாவிஸ் சந்திப்பால் மராட்டிய அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது.

    ஆனால் மகா விகாஸ் கூட்டணி அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்று சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் தலையங்கம் எழுதப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அதிகாலை அலாரம் கெடிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. அனைவரும் அலர்ட் மோடில் கெடிகாரத்தை வைத்து உள்ளனர். பாரதீய ஜனதா அதிகாலை அனுபவத்தை முன்பு முயற்சி செய்து பார்த்தது. ஆனால் அது 72 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது. அடுத்த 4½ ஆண்டுகளில் அதிகாலை அரசியல் எதுவும் நிகழாது.

    சஞ்சய் ராவத், பட்னாவிஸ் சந்திப்பு ரகசியமானது அல்ல. இரு தலைவர்களும் தங்களது சந்திப்புக்கான காரணம் குறித்து விளக்கமளித்து விட்டனர். மராட்டியத்தை சிவசேனா முதல்-மந்திரியும், மகா விகாஸ் கூட்டணியும் இயக்கி வருகிறது. இந்த அரசு முழுமையான காலத்தை நிறைவு செய்யும்.

    பாரதீய ஜனதா அதிகாலை அலாரத்தை வைத்தால், அதற்கு அவர்களது கெடிகாரம் (தேசியவாத கட்சி சின்னம்) வேகமாக செயல்பட்டு அதனை முறியடிக்க வேண்டும். அதில் எந்த தவறும் நடந்து விடாது. அந்த கெடிகாரம் ‘கை’யின் (காங்கிரஸ் சின்னம்) மீது உள்ளது. அதிகாலை அலாரம் கெடிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.

    அஜித்பவார் தற்போது சுவர் கெடிகாரமாக உள்ளார். அவர் அலார கெடிகாரமாக இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×