search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்து விதி மீறல்
    X
    போக்குவரத்து விதி மீறல்

    பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரே வாரத்தில் ரூ.2.14 கோடி அபராதம் வசூல்

    பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரே வாரத்தில் 48 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்த போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.2.14 கோடி அபராதம் வசூலித்து உள்ளனர்.
    பெங்களூரு :

    பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் முதல் ஜூலை மாதம் வரை கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. ஊரடங்கின் போது கொரோனா பீதி காரணமாக வாகன ஓட்டிகள் வெளியே வரவே இல்லை.

    இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்ட பின்னர் பெங்களூருவில் உள்ள அனைத்து சாலைகளிலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளையும் மீறி வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் வருகின்றனர். ஹெல்மெட் அணியாவிட்டாலும் முகக்கவசம் அணிந்து சென்றால் போக்குவரத்து போலீசார் பிடிக்க மாட்டார்கள் என்ற நிலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளனர்.

    இந்த நிலையில் போக்குவரத்து விதிமீறல் காரணமாக கடந்த சில தினங்களாக நகரில் விபத்து எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இதனால் மீண்டும் நகரில் போக்குவரத்து போலீசார் முழுவீச்சில் பணி செய்து வருகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர்.

    கடந்த 13-ந் தேதியில் இருந்து 19-ந் தேதி வரை 7 நாட்கள் நகரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியது, இருசக்கர வானத்தில் 3 பேர் பயணிப்பது, சிக்னலில் நிற்காமல் செல்வது, அதிவேகத்தில் வாகனத்தை இயக்கியது என்று 48,141 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.2 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்தை போலீசார் வசூலித்து உள்ளனர்.

    இதுகுறித்து போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தேகவுடா கூறியதாவது:-

    கொரோனா பீதியால் போக்குவரத்து போலீசார் பெரும்பாலும் பணியில் ஈடுபடவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டினார்கள்.

    இதனால் விபத்துகளும் அதிகரித்து வந்தன. இதனை தடுக்கும் வகையில் கடந்த 4 வாரமாக போக்குவரத்து போலீசார் முழுவீச்சில் வேலை செய்து வருகின்றனர். நகரில் ஒரே வாரத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.2.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாரின் ஆரோக்கியத்திலும் நாங்கள் கவனம் செலுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×