search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்னெஸ்டி இன்டர்நேஷனல்
    X
    அம்னெஸ்டி இன்டர்நேஷனல்

    வங்கிக்கணக்குகளை முடக்கிய மத்திய அரசு - இந்தியாவில் செயல்பாடுகளை நிறுத்துவதாக ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அறிவிப்பு

    வங்கிக்கணக்குகளை மத்திய அரசு முடக்கியதை தொடர்ந்து இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாக ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ என்ற பிரபல மனித உரிமை அமைப்பு அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ’அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ என்ற பிரபல மனித உரிமை அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட இந்த அமைப்பு இந்தியாவில் பெங்களூரில் தனது கிளையை நிறுவியுள்ளது.

    இந்தியாவில் மனித உரிமைகளை நிலைநாட்டுவது மற்றும் அது தொடர்பான தகவல்களை வெளியிடுவதே ’அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்பின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒரு என்ஜிஓ எனப்படும் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஆகும். 

    ஆனால், தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் இந்தியா அரசியல் மற்றும் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக ’அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ மீது பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருந்தது.

    மேலும், அந்த அமைப்பு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதியை பெற்றுக்கொண்டு இந்தியாவின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    குறிப்பாக, கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த அமைப்பால் பெங்களூரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் காஷ்மீரிகளின் சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி பிரிவினைவாதத்தை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

    காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் நீக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள், இந்தியாவின் குடியுரிமை திருத்தச்சட்டத்தை கண்டித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், டெல்லி வன்முறை தொடர்பாக போலீஸ் மீதான குற்றச்சாட்டுகள் என இந்திய அரசு மீது ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

    இதற்கிடையில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து நிதிபெறும் தொண்டு நிறுவனங்கள் இந்திய அரசிடம் முறைப்படி அனுமதிபெற வேண்டும். ஆனால், ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்போ தான் பெறும் வெளிநாட்டு நிதிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முறைப்படி அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நிதி பெற்று வந்தது. 

    வெளிநாட்டில் இருந்து நிதிபெற ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ கடைசியாக 2000-ம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. 

    அதன் பின் 20 ஆண்டுகளில் ஒருமுறைகூட வெளிநாட்டில் இருந்து நிதிபெற மத்திய அரசிடம் அந்த அமைப்பு உரிய அனுமதி பெறவில்லை. மேலும், இத்தனை ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் அந்த அமைப்பு நிதிபெற்று இந்தியாவில் தனது பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. 

    தற்போது வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டதையடுத்து, இந்திய சட்டவிதிகளை மீறியதற்காக ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்பின் வங்கிக்கணக்குகளை மத்திய அரசு சமீபத்தில் முடக்கியது.      
         
    இந்நிலையில், தனது வங்கிக்கணக்குகளை மத்திய அரசு முடக்கியதற்கு ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கைவெளியிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், ’ இந்தியாவில் ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எந்த தடையும் இல்லை. 

    ஆனால், உள்நாட்டு அரசியல் தொடர்பான விவகாரங்களில் வெளிநாட்டில் இருந்து நிதிபெறும் அமைப்பு தலையிடுவதை இந்திய அரசு அனுமதிக்காது. சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான் 'அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்புக்கும் இது பொருந்தும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×