search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு
    X
    சுப்ரீம் கோர்ட்டு

    வங்கி கடன் தவணை தொடர்பான வழக்கு: 1-ந் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    வங்கி கடன் தவணைத்தொகை செலுத்தாதவர்களின் கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்க வங்கிகள் எடுத்த முடிவு தொடர்பான வழக்கில், வருகிற 1-ந் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    பொதுமக்கள் பெற்ற வங்கி கடன்களுக்கான மாதத்தவணையை கொரோனா பாதிப்பின் காரணமாக 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. ஆனால் வங்கிகள் இந்த உத்தரவை மீறி, தொடர்ந்து வட்டி வசூலிப்பதாகவும், எனவே, அதை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி கஜேந்திர சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார். நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, கடன்தொகையை திருப்பிச் செலுத்தாத கணக்குகளை (ஆகஸ்டு 31-ந் தேதி வரை திருப்பிச் செலுத்தாதது) வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று கடந்த 3-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதிகள் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தனர்.

    பின்னர் கடந்த 10-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இந்த மனு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இரு வாரங்களில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வாராக்கடன் தொடர்பாக கடந்த 3-ந் தேதி பிறப்பித்த இடைக்கால தடை தொடரும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘இந்த விவகாரம் மிகவும் தீவிரமான பரிசீலனையில் உள்ளது. முடிவு எடுக்கும் கட்டத்தை அடைந்துவிட்டது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் முடிவு ஏற்பட்டு விடும். முடிவு எடுத்த பின்னரே பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய முடியும். அக்டோபர் 1-ந் தேதிக்குள் பிரமாண பத்திரம் மின்னஞ்சலில் அனுப்பப்படும்’ என்றார்.

    மனுதாரர் கஜேந்திர சர்மா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தத்தா, ‘இது மிகவும் முக்கியமான விஷயம். ஆனால் வங்கிகள் இது ஒரு சாதாரண பிரச்சினை போல செயல்படுகின்றன’ என்று வங்கிகள் மீது குற்றம் சாட்டினார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘மத்திய அரசின் முடிவு எதுவாக இருந்தாலும் இந்த வழக்கு 5-ந் தேதி மீண்டும் விசாரிக்கப்படும். பிரமாண பத்திரத்தை வருகிற 1-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், கடன்தொகையை திருப்பி செலுத்தாத வங்கி கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவு தொடரும்’ என்றும் உத்தரவிட்டனர்.
    Next Story
    ×