search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    எக்காரணம் கொண்டும் வேளாண்மை சந்தைகளை மூட மாட்டோம்: எடியூரப்பா பேட்டி

    எக்காரணம் கொண்டும் வேளாண்மை சந்தைகளை மூட மாட்டோம் என்றும், விவசாயிகள் பயப்பட தேவை இல்லை என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகளின் எதிர்காலம் கருதி, நில சீர்திருத்த சட்டம், வேளாண்மை சந்தைகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டசபையில் அதிகளவில் விவாதம் நடைபெற்றது. எனது விளைபொருள், எனது உரிமை. விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த விளைபொருட்களை வேளாண்மை சந்தைகள் உள்பட எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம். ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு விளைபொருட்களை கொண்டு சென்றால் முன்பு போலீசார் வழக்கு போட்டுவிடுவார்கள்.

    வேளாண்மை சந்தைகளை நாங்கள் மூடவில்லை. விவசாயிகள் 6 மாதங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நில சீர்திருத்த சட்டத்தில், பாசன நிலத்தை யாராவது வாங்கினால், அதை விவசாய நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனையுடன் திருத்தம் செய்துள்ளோம். கர்நாடகத்தில் சுமார் 20 லட்சம் ஏக்கர் நிலம் விவசாயம் செய்யாமல் கிடக்கிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினரின் நிலத்தை வாங்க அனுமதி இல்லை. சிறு விவசாயிகளின் நிலத்தையும் வாங்க அனுமதி வழங்கவில்லை.

    இந்த சட்ட திருத்தத்தால் யார் வேண்டுமானாலும் விவசாயம் செய்ய முடியும். விவசாயத்திற்கு பயன்படாத நிலத்தை வழங்கி தொழில் துறையை ஊக்குவிக்கப்படும். கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் கர்நாடக அரசு சார்பில் ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதனால் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் ஏற்படாது. விவசாயிகளின் வருமானத்தை பெருக்க பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார். இந்த விவகாரத்தில் சிலர் தவறான தகவல்களை கூறி விவசாயிகளை போராட தூண்டிவிடுகிறார்கள்.

    வேளாண்மை சந்தைகளில் இடைத்தரகர்களின் தலையீடு இருக்கிறது. இது எனக்கு தெரியும். நானும் அந்த பிரச்சினையை அனுபவித்தவன். விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை வேளாண்மை சந்தைகளிலும் விற்பனை செய்யலாம். அவர்களுக்கு எங்கு லாபம் அதிகமாக கிடைக்கிறதோ? அங்கு தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்துகொள்ள முடியும். கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்தங்களை 85 சதவீத விவசாயிகள் வரவேற்கிறார்கள்.

    நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று முன்பு காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். முன்பு காங்கிரஸ் ஆட்சியில் வேளாண்மை சந்தை வரி 1.5 சதவீதமாக இருந்தது. அதை நாங்கள் தற்போது 0.35 சதவீதமாக குறைத்துள்ளோம். வேளாண்மை சந்தைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம். ரிலையன்ஸ் போன்ற பெருநிறுவனங்களுக்கு விளைபொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கியதே காங்கிரஸ் தான்.

    நான் விவசாயிகளை அழைத்து பேசினேன். நாங்கள் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தில் என்ன பிரச்சினை உள்ளது என்று கேட்டேன். அவர்கள் பதில் அளிக்க தயாராக இல்லை. நாங்கள் முழு அடைப்பு நடத்த முடிவு செய்துவிட்டோம். அதனால் தொடர்ந்து போராடுவோம் என்று கூறினர். எக்காரணம் கொண்டும் வேளாண்மை சந்தைகளை மூட மாட்டோம். எனவே விவசாயிகள் பயப்பட தேவையில்லை. விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறைக்கும், நாங்கள் கொண்டு வந்துள்ள சட்டத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. விவசாயிகள் மீது எனக்கு அக்கறை இல்லையா?.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
    Next Story
    ×