search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் பேரணி
    X
    விவசாயிகள் பேரணி

    கர்நாடகா பந்த்: வேளாண் மசோதாக்களை கண்டித்து விவசாயிகள் பேரணி, பல்வேறு இடங்களில் கடைகள் அடைப்பு

    வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று விவசாய சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
    பெங்களூரு:

    மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்தங்களை எதிர்த்தும் போராட்டம் நடைபெறுகிறது, மாநில பாஜக அரசு பிறப்பித்துள்ள கர்நாடக நில சீர்திருத்த திருத்தச்சட்டம், கர்நாடகா விவசாய உற்பத்தி சந்தை மற்றும் தொழிலாளர் திருத்த சட்டத்தை எதிர்த்தும் போராட்டம் நடைபெறுகிறது.

    மத்திய, மாநில அரசுகளின் சட்டத்தை எதிர்த்து கர்நாடகா முழுதும் இன்று, விவசாய சங்கங்களின் ஐக்கிய போராட்ட குழு சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. மாநில விவசாய சங்கம், கரும்பு விவசாய சங்கம், தொழிலாளர் சங்கம், கன்னட அமைப்பினர் உள்பட மொத்தம் 32 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக கர்நாடக காங்கிரஸ் கட்சியும், சி.ஐ.டி.யு. அமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது. 

    தனியார் பஸ்கள், ஆட்டோ, டாக்சிகள் ஓடவில்லை. பல்வேறு பகுதிகளில் வணிக வளாகங்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முழு அடைப்புக்கு ஆதரவு தரும்படி கடைக்காரர்களிடம் விவசாய சங்க நிர்வாகிகள் நேரில் சென்றுகேட்டுக்கொண்டனர். ஹூப்ளியில் கடைக்காரர்களுக்கு மலர் கொடுத்து ஆதரவு கேட்டனர். 

    கடைக்காரரிடம் முழு அடைப்புக்கு ஆதரவு கேட்கும் விவசாயிகள்

    விவசாய அமைப்பினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தினர். ஹசன் நகரில் ஹேமாவதி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாய அமைப்பினர், அங்கிருந்து மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கினர். முழு அடைப்பு போராட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என தெரிகிறது.

    அதே நேரத்தில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஓட்டல்கள் திறந்து இருக்கும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. முழுஅடைப்பு இருந்தாலும் கே.எஸ்.ஆர்.டி.சி., பி.எம்.டி.சி. உள்ளிட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

    மோட்டார் சைக்கிள் பேரணி

    பேருந்துகளில் வழக்கத்தை விட குறைவான பயணிகளே பயணம் செய்தனர். பெங்களூருவில் மெட்ரோ ரெயில்கள் இயங்குகின்றன. பெங்களூரு மார்க்கெட்டுகள் திறந்துள்ளன. அதுபோல அத்தியாவசிய பொருட்களான பால், மருந்துக்கடைகள், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் திறந்துள்ளன. சிவமோகா உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமான போக்குவரத்து காணப்பட்டது.

    முழுஅடைப்பு போராட்டம் காரணமாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. முக்கிய பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கர்நாடக அரசு சமீபத்தில், கர்நாடக நில சீர்திருத்தம் திருத்தச்சட்டம், கர்நாடகா விவசாய உற்பத்தி சந்தை திருத்த சட்டம் ஆகியவற்றை அவசர சட்ட வடிவில் பிறப்பித்தது. இந்த சட்டத்தில் விவசாய துறை சாராதவர்கள், அவர்கள் எந்த வருவாய் பிரிவினராக இருந்தாலும் விவசாய நிலங்களை வாங்க முடியும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை பிறர் வாங்குவது கிரிமினல் குற்றமாக கருதப்பட்ட சட்ட பிரிவு நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×