search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    மந்திரிசபையை மாற்றியமைக்க முடிவு: சில மந்திரிகளை நீக்கவும் எடியூரப்பா திட்டம்

    சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு பெற்றதை தொடர்ந்து மந்திரிசபையை மாற்றியமைக்க முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்துள்ளார். சில மந்திரிகளை நீக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. பிற கட்சிகளில் இருந்து வந்தவர்கள் மந்திரி பதவி வழங்கும்படி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதையடுத்து, சமீபத்தில் டெல்லிக்கு சென்று பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

    அப்போது மந்திரிசபை விரிவாக்கத்தை சட்டசபை கூட்டத்தொடருக்கு பின்பு நடத்த எடியூரப்பாவுக்கு, பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கி இருப்பதாக தெரிகிறது. நேற்று முன்தினம் கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. மேலும் கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, பா.ஜனதா அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திலும் எடியூரப்பா வெற்றி பெற்றார்.

    இந்த நிலையில், சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு பெற்றுள்ளதால் மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பதில் மந்திரிசபையை மாற்றி அமைக்க முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில், சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்து வரும் சி.டி.ரவி, பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். பா.ஜனதா கட்சியின் விதிமுறையின்படி ஒருவர் ஒரு பதவியில் தான் இருக்க வேண்டும். தற்போது அவர் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால், மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுபோல, சரியாக செயல்படாத சில மந்திரிகளை ஏற்கனவே நீக்க முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்திருந்தார். அதன்படி, சசிகலா ஜோலே, பிரபு சவான், கோட்டா சீனிவாச பூசாரி உள்ளிட்டோர் நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக கூறப்படுவோர் டெல்லிக்கு சென்று பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், மந்திரிசபையை விரிவாக்கம் செய்யவே முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்திருந்தார். ஆனால் தற்போது மந்திரிசபையை மாற்றிய அமைக்க அவர் திட்டமிட்டு வருவதால், பதவியில் இருந்து நீக்கப்படுவதாக கூறப்படும் மந்திரிகள் கலக்கத்தில் உள்ளனர். அதே நேரத்தில் மந்திரிசபை விரிவாக்கம் செய்தாலும் அல்லது மாற்றி அமைத்தாலும் எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர், உமேஷ் கட்டி, சி.பி.யோகேஷ்வர் உள்ளிட்டோருக்கு மந்திரி பதவி கிடைப்பது உறுதி என்று சொல்லப்படுகிறது.

    மந்திரிசபை விரிவாக்கம் செய்வதா? அல்லது மந்திரிசபையை மாற்றி அமைப்பதா? என்பது குறித்து பா.ஜனதா தேசிய தலைவர்களுடன் ஆலோசித்து முதல்-மந்திரி எடியூரப்பா இறுதி முடிவு எடுக்க உள்ளார். என்றாலும், அடுத்த மாதம் (அக்டோபர்) 4 அல்லது 5-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் அல்லது மாற்றி அமைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×