search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு
    X
    கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு

    வேளாண் சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு

    வேளாண் சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கம் சார்பில் கர்நாடகத்தில் இன்று (திங்கட்கிழமை) முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி ஆட்டோக்கள், கார்கள் ஓடாது. ஆனால் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் ஏ.பி.எம்.சி. மார்க்கெட் மற்றும் நில சீர்திருத்த சட்ட திருத்ததை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

    இதுபோல மத்திய அரசு வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத் திருத்தங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாக விவசாய சங்கங்களும். காங்கிரஸ் கட்சியும் குற்றச்சாட்டு கூறி வருகின்றன. இதையடுத்து இந்த சட்ட திருத்தங்களுக்கு எதிராக கர்நாடகத்தில் வருகிற 28-ந் தேதி (அதாவது இன்று) முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்களின் ஐக்கிய போராட்ட குழு அறிவித்துள்ளது.

    ஏற்கனவே விவசாய சங்கங்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் திட்டமிட்டபடி 28-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி இன்று (திங்கட்கிழமை) மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்தங்களுக்கு எதிராக கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டம் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    முழு அடைப்பு போராட்டத்திற்கு மாநில விவசாய சங்கம், கரும்பு விவசாய சங்கம், தொழிலாளர் சங்கம், கன்னட அமைப்பினர் உள்பட மொத்தம் 32 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக சி.ஐ.டி.யு. அமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஓட்டல்கள் திறந்து இருக்கும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    அதுபோல முழுஅடைப்பு இருந்தாலும் மாநிலத்தில் கே.எஸ்.ஆர்.டி.சி., பி.எம்.டி.சி. உள்ளிட்ட அரசு பஸ்கள் வழக்கம்போல இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவையும் இருக்கும் பெங்களூரு மார்க்கெட்டுகள் திறந்திருக்கும். அதுபோல அத்தியாவசிய பொருட்களான பால், மருந்துக்கடைகள், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் எப்போதும் போல திறந்திருக்கும்.

    ஆனால் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் தனியார் பஸ்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆட்டோக்கள், வாடகை கார்கள் ஓடாது. அதே வேளையில் விமான நிலையத்துக்கு இயக்கப்படும் வாடகை கார்கள் வழக்கம் போல் ஓடும். வணிக வளாகங்கள் மூடப்பட்டு இருக்கும். முழு அடைப்பையொட்டி பெங்களூரு டவுன்ஹால் பகுதியில் இருந்து மைசூரு வங்கி சர்க்கிள் வரை இன்று காலையில் விவசாய சங்கங்கள் சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

    இந்த முழுஅடைப்பு குறித்து விவசாய சங்கங்களின் ஐக்கிய போராட்டக்குழு தலைவர் குருபூர் சாந்தகுமார் நிருபர்களிடம் கூறுகையில், மத்திய- மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிராக வேளாண் மசோதாக்களை அமல்படுத்தியுள்ளது. இந்த மசோதாக்களுக்கு எதிராகவும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கர்நாடகத்தில் நாளை (அதாவது இன்று) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால் திட்டமிட்டபடி முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெறும். விவசாயிகளை பாதிக்கும் சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிராக நடைபெறும் முழு அடைப்புக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    பெங்களூரு டவுன்ஹாலில் இருந்து மைசூரு வங்கி சர்க்கிள் வரை நடைபெறும் பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். பெங்களூரு மட்டுமின்றி மாவட்ட தலைநகர், தாலுகா தலைநகர் உள்பட மாநிலம் முழுவதும் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

    இந்த நிலையில் முழு அடைப்பு போராட்டத்தை ஒட்டி கர்நாடகத்தில் இன்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இன்று நடைபெற இருந்த தேர்வுகள் வருகிற 30-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு ஒள்ளது.

    முழுஅடைப்பு போராட்டம் காரணமாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பெங்களூரூவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீதும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்து எச்சரித்துள்ளார்.

    இதற்கிடையே இன்று நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு கர்நாடக காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த முழுஅடைப்பின் போது காங்கிரசாரும் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் விவசாய சங்கங்கள் சார்பில் நடக்கும் இந்த முழுஅடைப்புக்கு ஜனதாதளம் (எஸ்) கட்சியும் ஆதரவு வழங்கி இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.டி.குமாரசாமி நேற்று தெரிவித்தார்.

    அதுபோல் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சாலைகளை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதனால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என தெரிகிறது.
    Next Story
    ×