search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுக்பிர் சிங் பாதல்
    X
    சுக்பிர் சிங் பாதல்

    பா .ஜனதா கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறியது - சுக்பிர் சிங் பாதல் அறிவிப்பு

    மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறுவதாக கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் தெரிவித்து உள்ளார்.
    சண்டிகர்:

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த முக்கிய கட்சிகளில் சிரோமணி அகாலிதளமும் ஒன்று. அதிலும் தேசிய ஜனநாயக கூட்டணி நிறுவனர்களில், அகாலிதளத்தின் மூத்த தலைவரான பிரகாஷ் சிங் பாதலும் ஒருவர் ஆவார்.

    அப்படி பா.ஜனதாவுக்கும், சிரோமணி அகாலிதளத்துக்கும் நீண்டகாலமாக நீடித்து வந்த நட்புக்கு சமீபத்திய வேளாண் மசோதாக்கள் முட்டுக்கட்டையை ஏற்படுத்தின. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த 3 மசோதாக்களும் விவசாயிகளுக்கு பெரும் பாதகமாக மாறும் என மத்திய அரசை எச்சரித்த சிரோமணி அகாலிதளம், அந்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல் தேர்வு கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டது.

    ஆனால் அகாலிதளத்தின் இந்த வேண்டுகோளை நிராகரித்த மத்திய அரசு, இந்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மசோதாக்கள் 2 அவைகளிலும் நிறைவேறி ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, அகாலிதளம் சார்பில் மத்திய மந்திரி சபையில் அங்கம் வகித்து வந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினார். மேலும் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் எனவும் அவர் கூறினார்.

    இந்த நிலையில் சிரோமணி அகாலிதளத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று சண்டிகரில் நடந்தது. இதில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என முடிவு செய்யப்பட்டது. இதை கட்சி தலைவர் சுக்பிர் சிங் பாதல் பின்னர் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

    பின்னர் கட்சி சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ‘விவசாயிகளின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படுவதை பாதுகாக்க சட்டப்பூர்வ உத்தரவாதங்களை வழங்க மத்திய அரசு பிடிவாதமாக மறுத்ததாலும், காஷ்மீரில் பஞ்சாபி மொழியை அலுவல் மொழியில் இருந்து விலக்குவது போன்ற பஞ்சாபி மற்றும் சீக்கிய பிரச்சினைகள் மீது அதன் தொடர்ச்சியான அக்கறையின்மை காரணமாகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என முடிவு எடுக்கப்பட்டது’ என கூறப்பட்டு இருந்தது.

    இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ள 3-வது முக்கியமான கட்சி சிரோமணி அகாலிதளம் ஆகும். முன்னதாக தெலுங்குதேசம், சிவசேனா ஆகிய கட்சிகள் இந்த கூட்டணியில் இருந்து விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×