search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் படுக்கைகள் 31 ஆயிரமாக அதிகரிக்கப்படும்: எடியூரப்பா

    கர்நாடகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை 31 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் காணொலியில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். இதில் எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரித்துள்ளோம். மொத்தம் 136 ஆய்வகங்கள் உள்ளன. தினசரி 70 ஆயிரம் மாதிரி பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதுவரை 43 லட்சம் பரிசோதனைகளை செய்துள்ளோம். வைரஸ் பாதித்தோரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம். இதற்காக ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை 800-ல் இருந்து 2 ஆயிரமாக அதிகரித்துள்ளோம். வைரஸ் பாதித்தோருடன் தொடர்பில் இருந்தவர்களை 48 மணி நேரத்திற்குள் கண்டறிந்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்து இருப்பதால், வைரஸ் பாதிப்பும், மரண விகிதமும் கணிசமாக குறைந்து வருகிறது. கர்நாடகத்தில் மரண விகிதம் 2.6 சதவீதத்தில் இருந்து 1.54 ஆக குறைந்துள்ளது. மேலும் இது கடந்த ஒரு வாரமாக 1.3 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. மேலும் மரண விகிதத்தை 1 சதவீதத்திற்குள் கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

    கொரோனா நோாளிகளுக்கு ரெம்டிசிவர் உள்ளிட்ட விலை உயர்ந்த மருந்துகளை பயன்படுத்தி உள்பட சிறப்பான முறையில் இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறோம். சிகிச்சை முறைகளை பரிந்துரைக்க ஒரு மருத்துவ நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். அந்த குழு அவ்வப்போது பரிந்துரைக்கும் சிகிச்சை முறையை நாங்கள் பின்பற்றி வருகிறோம். கொரோனா பரவிய தொடக்க காலத்தில் கர்நாடகத்தில் 7 ஆயிரம் படுக்கைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் வசதி இருந்தது. அந்த எண்ணிக்கையை தற்போது 18 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம்.

    இதில் 10 ஆயிரம் படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கி வைத்துள்ளோம். இதுதவிர தனியார் மருத்துவமனைகளில் 4,250 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்தால் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை 31 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

    ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவையான மருத்துவமனைகளுக்கு உடனடியாக வழங்க மாநில மற்றும் மாவட்ட அளவில் குழுக்களை அமைத்துள்ளோம். தற்போது மாநிலத்தில் 375 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இது அடுத்து வரும் நாட்களில் 870 டன்னாக அதிகரிக்கும். இந்த தேவையை எதிர்கொள்ள புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

    கர்நாடகத்தில் பரிசோதனையை 3 மடங்கு அதிகரிக்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், 9 மாவட்டங்களில் அதிகமாக உள்ள கொரோனா மரண விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
    Next Story
    ×