search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நீரிழிவால் கண்பார்வை பாதிப்புக்கு புதிய ஊசி மருந்து - இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி

    நீரிழிவு தாக்குதலில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில், நீரிழிவால் ஏற்படும் கண்பார்வை பாதிப்புக்கு புதிய ஊசி மருந்தை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
    கொல்கத்தா:

    டயாபடீஸ் என்று அழைக்கப்படுகிற நீரிழிவு நோய் தாக்கத்தில், உலகிலேயே 2-வது இடத்தில் இந்தியா உள்ளது.

    இங்கு 7 கோடியே 70 லட்சம் பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னு 10 ஆண்டுகளில், 2030-ல் 10 கோடியாக உயரும் என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

    நீரிழிவு நோய் தாக்கியவர்களுக்கு ‘டயாபடீக் மாகுலர் எடிமா’ என்ற பிரச்சினையால் மிதமான பார்வை இழப்பு நேரிடுகிறது. இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவில் இந்த பாதிப்பு 2 கோடியே 24 லட்சம் பேருக்கு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பன்னாட்டு மருந்து நிறுவனமான பேயர், ஒரு ஊசி மருந்தை கண்டுபிடித்துள்ளது. ஆப்லிபெர்செப்ட் (ஐலி) என்ற பெயரிலான இந்த ஊசி மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தனது ஒப்புதலை வழங்கி உள்ளது.

    இந்த தகவலை பேயர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    தற்போது பார்வை இழப்புக்கு ஆளாகியுள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு தற்போது கிடைக்கக்கூடிய சிகிச்சைகளுக்கு ஒரு புதிய மாற்று சிகிச்சையாக இது அமையும் என்று கருதப்படுகிறது.

    இதுபற்றி பேயர் ஜைடஸ் பார்மா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனோஜ் சக்சேனா கூறியதாவது:-

    இந்தியாவில் நீரிழிவு நோய் பரவலாக வளர்ந்து வருகிறது. அதோடு குறைந்த அளவில்தான் விழிப்புணர்வு உள்ளது. இதனால் பார்வை தொடர்பான சிக்கல்களையும் காண முடிகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானவர்கள் 50 வயதுக்கு உட்பட்டவர்கள், அவர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களை சார்ந்து குடும்பங்கள் இருக்கின்றன. இதனால் பொருளாதார சமூக சுமை அதிகமாக உள்ளது.

    இந்த நிலையில் ஆப்லிபெர்செப் (ஐலி) ஊசி மருந்து, நீரிழிவால் பார்வை இழப்புக்கு ஆளானவர்களுக்கு புதிய விருப்பத்தை வழங்குகிறது. இதனால் நோயாளிகள் தங்கள் பார்வையை தக்க வைத்துக்கொள்ளவும், வழக்கமான அன்றாட வேலைகளை செய்யவும் அனுமதிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×