search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்பு பணி
    X
    மீட்பு பணி

    கொட்டும் மழையிலும் மீட்பு பணி- மகாராஷ்டிரா கட்டிட விபத்தில் உயிரிழப்பு 41 ஆக உயர்வு

    மகாராஷ்டிர மாநிலம் பிவண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் பிவண்டியில் திங்கட்கிழமை அதிகாலை மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த கட்டிடம் மோசமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

    குடியிருப்பில் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதால், அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர். தகவல் அறிந்து வந்த பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

    படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. 

    நேற்று மாலை வரை பலி எண்ணிக்கை 40 ஆக இருந்த நிலையில், அதன்பின்னர் மேலும் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதனால் கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் பிவண்டி மற்றும் தானே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    நேற்று இரவு கொட்டும் மழையிலும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றது. 4வது நாளாக இன்றும் மீட்பு பணி நீடிக்கிறது.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உள்ளாட்சி அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கட்டிட உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×