search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் 25 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம்

    கர்நாடகத்தில் கொரோனா விதிமுறைகளை மக்கள் மீறுவதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை தொடும் என்றும், 25 லட்சம் நபர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தலைநகரான பெங்களூருவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் இருக்கிறது. கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 5 லட்சத்து 33 ஆயிரத்து 850 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதுடன், 8 ஆயிரத்து 228 பேர் பலியாகி உள்ளனர். பெங்களூருவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டி இருக்கிறது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கர்நாடகம் 4-வது இடத்தில் உள்ளது.

    இந்த நிலையில், கர்நாடகத்தில் கொரோனா தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள விதிமுறைகளை மக்கள் சரியாக கடைப்பிடிப்பதில்லை என்று நிபுணர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். குறிப்பாக பெங்களூரு உள்பட மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் முக கவசம் அணிவதில்லை என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை என்றும், மக்கள் அலட்சியமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு இதே நிலையில் சென்றால் அடுத்த ஆண்டு (2021) ஏப்ரல் முதல் வாரத்திற்குள் 25 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய அறிவியல் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குள் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு 25 ஆயிரம் பேர் பலியாக வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் கொரோனா தடுப்பு ஊசி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் கிடைக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    மார்ச் மாததத்திற்கு முன்பாக கொரோனா தடுப்பு ஊசி கிடைத்தாலும், மாநிலத்தில் ஏப்ரல் மாதம் வரை கொரோனா பாதிப்பு உச்சமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அத்துடன் நவம்பர் முதல் வாரத்திற்குள் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தொட வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிர் இழப்பு தொடர்பாக நிபுணர்கள் 2 விதமாக ஆய்வு நடத்தி உள்ளனர். அதாவது ஜனவரி 1-ந் தேதிக்கு முன்பாக கொரோனாவுக்கு தடுப்பு ஊசி கிடைத்தால், மார்ச் இறுதிக்குள் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வரும் என்று கணித்துள்ளனர். ஜனவரி 1-ந் தேதிக்கு பின்பு தடுப்பு ஊசி கிடைத்தால் ஏப்ரல் முதல் வாரம் வரை கொரோனா பாதிப்பு உச்சமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், 24 லட்சம் குணமடைந்து இருப்பார்கள் என்றும், 80 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவார்கள் என்றும், 25 ஆயிரம் பேர் வரை உயிர் இழக்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து நிபுணர் சசிகுமார் கூறுகையில், “கர்நாடகத்தில் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும். தற்போது போராட்டங்கள், பேரணிகள் அதிகமாக நடந்து வருகிறது. பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மார்க்கெட் உள்ளிட்ட கடைகளின் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதுபோன்ற காரணங்களால் கொரோனா பாதிப்பு மாநிலத்தில் அதிகமாக இருக்கும். தடுப்பு ஊசி கிடைத்தாலும், கொரோனா பாதிப்பு 2021-ம் ஆண்டு இறுதியில் தான் முடிவுக்கு வரும்“ என்றார்.
    Next Story
    ×