search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள்  போராட்டம்
    X
    விவசாயிகள் போராட்டம்

    புதிய சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிராக கர்நாடகத்தில் முழுஅடைப்பு நடத்த விவசாயிகள் ஆலோசனை

    புதிய சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிராக கர்நாடகத்தில் முழுஅடைப்பு நடத்த விவசாயிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் நிலச்சீர்திருத்தம், மின்சார சீர்திருத்தம், ஏ.பி.எம்.சி. சட்ட திருத்தங்களை அரசு கொண்டு வந்து உள்ளது. இந்த சட்ட திருத்தங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் கூறி வருகின்றன. இதன்காரணமாக 3 சட்ட திருத்தங்களையும் அமல்படுத்த கூடாது என்று வலியுறுத்தி நேற்று முன்தினம் பெங்களூரு சுதந்திர பூங்காவில் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

    முன்னதாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த விவசாயிகள் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து சுதந்திர பூங்காவுக்கு பிரமாண்ட பேரணி நடத்தினர். அப்போது புதிய சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் சட்ட திருத்தங்களை அமல்படுத்தும் முடிவை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று கூறிய விவசாய சங்கத்தினர், அதையும் மீறி அரசு அமல்படுத்தினால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று கூறி இருந்தனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக புதிய சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிராக, சுதந்திர பூங்காவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு சென்ற கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். மேலும் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான எச்.டி.ரேவண்ணாவும் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது, விவசாயிகளின் நண்பன் என்று கூறி வரும் பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு எதிரான சட்ட திருத்த மசோதாக்களை அமல்படுத்த முடிவு செய்து உள்ளார். அவருக்கு உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருந்தால், புதிய சட்ட திருத்த மசோதாக்களை அமல்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என்றார்.

    இதற்கிடையே புதிய சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகத்தில் முழுஅடைப்பு நடத்துவது தொடர்பாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காணொலி காட்சி மூலமாக, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் இன்று முழு அடைப்பு நடத்துவது தொடர்பாக விவசாயிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆலோசனையின் முடிவில் தான் முழு அடைப்பு நடைபெறுமா? என்பது தெரியவரும்.
    Next Story
    ×