search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கடந்த 4 ஆண்டுகளில் 2,120 பாகிஸ்தானியருக்கு இந்திய குடியுரிமை - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

    கடந்த 4 ஆண்டுகளில், 44 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 729 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டதாக மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் அளித்த பதில் வருமாறு:-

    கடந்த 4 ஆண்டுகளில், 44 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 729 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. இவர்களில், பாகிஸ்தானியர் மட்டும் 2 ஆயிரத்து 120 பேர் ஆவர். ஆப்கானிஸ்தானை சேர்ந்த 188 பேரும், வங்காளதேசத்தை சேர்ந்த 99 பேரும், அமெரிக்காவை சேர்ந்த 60 பேரும், இலங்கையை சேர்ந்த 58 பேரும், நேபாளத்தை சேர்ந்த 31 பேரும், இங்கிலாந்தை சேர்ந்த 20 பேரும், மலேசியாவை சேர்ந்த 19 பேரும், கனடாவை சேர்ந்த 14 பேரும், சிங்கப்பூரை சேர்ந்த 13 பேரும் இதில் அடங்குவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த மார்ச் மாதம் டெல்லி நிஜாமுதின் பகுதியில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடுதான், மேலும் பலருக்கு கொரோனா பரவ காரணமாக அமைந்தது என்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கிஷன் ரெட்டி கூறினார். தப்லிகி ஜமாத்தை சேர்ந்த 233 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 2 ஆயிரத்து 361 பேர், ஜமாத் தலைமையகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். மத்திய போலீஸ் படைகளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் கூறினார். அதிகபட்சமாக எல்லை பாதுகாப்பு படையில் 28 ஆயிரத்து 926 காலியிடங்கள் உள்ளன என்றும், 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலியிடங்களை நிரப்பும் பணி, தற்போது நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

    நாட்டில் நக்சலைட் வன்முறை கணிசமாக குறைந்து விட்டதாகவும், தற்போது 46 மாவட்டங்களில் மட்டுமே நக்சலைட் வன்முறை நீடித்து வருவதாகவும் மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் கூறினார். விவசாயிகள் தற்கொலை குறித்து நிறைய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தகவல்கள் அளிப்பதில்லை என்றும், அதனால், விவசாயிகள் தற்கொலை பற்றிய தேசிய அளவிலான புள்ளிவிவரங்கள் இல்லை என்றும் கிஷன் ரெட்டி கூறினார். அசாம் மாநிலத்தில் பல்வேறு தடுப்புக்காவல் மையங்களில் அடைக்கப்பட்டிருந்த 350 பேர், கொரோனாவை கருத்திற்கொண்டு, இந்த ஆண்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் தெரிவித்தார்
    Next Story
    ×